விழுப்புரம்: செஞ்சி அடுத்த சிற்றரசூர் ஏரியில் காட்டுப்பன்றியை வேட்டையாட வைத்த மின்வேலியில் சிக்கி மாயாண்டி என்ற விவசாயி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும்சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிற்றரசூர் ஏரி பகுதியில் ராமலிங்கம், சுந்தரமூர்த்தி ஆகியோர் இரவு நேரங்களில் காட்டுப்பன்றியைப் பிடிக்க மின்வேலியை அமைத்திருந்தனர்.
இந்நிலையில் கடந்த 17 நாள்களுக்கு முன்பு சிற்றரசூர் எரியில் காட்டுப்பன்றியை வேட்டையாட வைக்கப்பட்ட மின்வேலியில் அதே கிராமத்தைச் சேர்ந்த மாயாண்டி(50) என்ற விவசாயி மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இச்சம்பவத்தை அறிந்த ராமலிங்கம், சுந்தரமூர்த்தி ஆகியோர் இறந்துபோன விவசாயி மாயாண்டியின் உடலை கிராம மக்களுக்குத் தெரியாமல் மறைக்க சிற்றரசூர் மலைப்பகுதியில் தூக்கி வீசிச் சென்றுள்ளனர்.
இந்நிலையில் விவசாய நிலத்திற்குச் சென்ற மாயாண்டி காணாமல் போனதை அறிந்த அவரது மனைவி சரசு அனந்தபுரம் காவல் நிலையத்தில் கடந்த 17 நாள்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். தனது கணவரைக் காணவில்லை, தேடிக்கண்டுபிடித்து தருமாறு புகார்தந்த நிலையில், அனந்தபுரம் காவலர்கள் மெத்தனமாக விசாரணை மேற்கொண்டதால் காணாமல் போனவர் பற்றிய விவரம் தெரியாமல் உறவினர்கள் தவித்து வந்தனர்.
இந்நிலையில், கிராம பொதுமக்களிடையே மாயாண்டி சட்டவிரோதமாக ஏரிப்பகுதியில் வைக்கப்பட்ட மின்வேலியில் சிக்கி உயிரிழந்துள்ளார் என்ற தகவல் வெளியானதையடுத்து, அனந்தபுரம் காவலர்கள் கிராமப் பகுதியில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், காட்டுப்பன்றிகள் வைத்திருந்த மின்வேலியில் சிக்கி உயிரிழந்த விவசாயி மாயாண்டியின் உடலை ராமலிங்கம், சுந்தரமூர்த்தி, பெருமாள் ஆகியோர் யாருக்கும் தெரியாமல் மலைப்பகுதியில் வீசிச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர், காவலர்கள் சம்பவ இடத்திற்குச்சென்று உடலை மீட்டு முண்டியம்பாக்கம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சட்டவிரோதமாக மின்வேலியைப் பயன்படுத்தி, விவசாயியின் உயிரிழப்புக் காரணமாக இருந்ததோடு மட்டுமல்லாமல், அதனை மலைப்பகுதியில் வீசிச்சென்று நாடகமாடிய மூவரின் செயல் தற்போது வெளிவந்துள்ளது. இந்நிகழ்வு சுற்றுவட்டார கிராம மக்களிடையே பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: 'உப்புமாவில் விஷம் கலந்து குழந்தையை கொன்ற தாய்.. காதலால் கொடூரம்...'