சென்னை: தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்தில் எட்டு வழி செயற்கை தடகள ஓடுதளம் அமைக்க, ஒன்றிய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகம், 8 கோடியே 30 லட்சம் ரூபாயை ஒதுக்கியுள்ளது.
இந்த செயற்கை தடகள ஓடுதளத்தை அமைப்பதற்கு சர்வதேச தேர்வில் தேர்ச்சிப் பெற்ற சர்வதேச தடகள வீரர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைக்கக் கோரி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ஓய்வு பெற்ற மண்டல மூத்த மேலாளர் மோகன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அந்த மனுவில், “செயற்கை தடகள ஓடுதளத்தில் பல்வேறு வரையறைகள் உள்ளது. அதை பூர்த்தி செய்ய நிபுணர் குழு அமைப்பது அவசியம். இப்பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அமைத்துள்ள நிபுணர் குழு என்பது தகுதியானதாக இல்லை. வெளிப்படைத்தன்மை பின்பற்றப்படவில்லை.
அதனால், சர்வதேச தேர்வில் தேர்ச்சிப் பெற்ற தடகள வீரர்கள், இந்திய தடகள கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் அடங்கிய நிபுணர் குழுவை அமைத்து, பணிகளை மேற்பார்வையிட உத்தரவிட வேண்டும்” எனக் கோரியுள்ளார். இந்த வழக்கு விசாரணை இன்று (டிச.11) நடைபெற்றது.
அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் டி.சிவராமன் ஆஜராகி வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு, தமிழ்நாடு மாநில விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: புதுவை மாநில தலைமைச் செயலாளருக்கு பிடிவாரண்ட்