சென்னை சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகையில் சுற்றுச்சூழல் துறை அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் கண்காணிப்பாளராக இருந்துவருபவர் பாண்டியன். இவர் லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சுற்றுச்சூழல் அலுவலகம், சாலிகிராமம் திடீர் நகரில் அமைந்துள்ள கண்காணிப்பாளர் பாண்டியனின் வீட்டில் நேற்று (டிச. 14) திடீர் சோதனை மேற்கொண்டனர்.
காவல் கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் (ஏடிஎஸ்பி) லாவண்யா, காவல் துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) சங்கர சுப்பிரமணியம் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத் துறை காவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்தச் சோதனையில் பனகல் மாளிகையில் உள்ள அவரது அலுவலகத்தில் கணக்கில் வராமல் வைத்திருந்த ரூ.88,500 பணம், வங்கிக் கணக்கில் 38 லட்ச ரூபாய் பணத்தைப் பறிமுதல்செய்தனர்.
மேலும் சாலி கிராமத்தில் உள்ள பாண்டியனின் வீட்டில் மட்டும் இன்று (டிச. 15) காலை வரை சோதனையானது நடைபெற்றுவந்தது. அதில் கணக்கில் வராமல் வைத்திருந்த ஒரு கோடியே 37 லட்ச ரூபாய் பணம், 1.22 கோடி மதிப்பிலான நகைகள், 1.51 கோடி வெள்ளி நகைகள், 1.51 லட்ச ரூபாய் வைர நகைகளை லஞ்ச ஒழிப்புத் துறையினர் பறிமுதல்செய்துள்ளதாகச் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, ஏழு கோடி ரூபாய் மதிப்புடைய 18 சொத்து ஆவணங்களையும், 37 லட்ச ரூபாய் சேமித்து வைக்கப்பட்டுள்ள வங்கிக் கணக்கு ஆவணங்களையும், ஒரு கார், மூன்று இருசக்கர வாகனத்தையும் லஞ்ச ஒழிப்பு துறையினர் பறிமுதல்செய்துள்ளனர்.
இதையும் படிங்க...நேற்று உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்: இன்று ‘டெண்டர் பழனிசாமி’ என்று ஸ்டாலின் விமர்சனம்!