சிவகங்கை: திருப்புவனம் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சந்தனராஜ். இவர் சமீபத்தில் பேசிய ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.
அந்த ஆடியோவில், தனது மகள் நிச்சயதார்தத்திற்கு நாள் குறிப்பதற்காக மாப்பிள்ளை வீட்டிற்கு செல்வதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்து வைத்திருந்தேன். இதனால் உறவினர்கள் அனைவரும் வீட்டிற்கு வந்து தங்கிவிட்டார்கள்.
இந்நிலையில் அன்றைய நாளில் கோயம்புத்தூரில் பந்தோபஸ்து பணிக்கு செல்ல வேண்டும் என திடீரென எழுத்தர் போன் செய்து கூறினார். மகளின் நிச்சயதார்த்தம் குறித்து சொன்ன போதும் உயரதிகாரிகள் கண்டிப்பாக செல்ல வேண்டும் என வற்புறுத்தினார்கள்.
இதனால், வேறு வழியின்றி பந்தோபஸ்து பணிக்கு சென்றதாகவும், இதனால் தனது மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி தடைப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளார்.
இது போன்ற சம்பவத்தால் தான் மன உளைச்சல் ஏற்பட்டு காவலர்கள் தற்கொலை செய்து கொள்வதாக தெரிவித்துள்ளார். அட்ஜஸ்மெண்ட் இல்லாத இந்த காவல்துறையில் வேலை பார்த்து என்ன புண்ணியம் என மனமுடைந்து பேசியுள்ளார் சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தானராஜ்.
இந்த ஆடியோ வைரலான நிலையில், தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திர பாபு சிறப்பு உதவி ஆய்வாளர் சந்தானராஜிற்கு வருத்தம் தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
கடிதத்தில், தங்களது மகளின் திருமண நிச்சயதார்த்தம் நிகழ்ச்சி நடைபெற இருந்ததும், அதில் கலந்துக்கொள்ள விடுப்பு மறுக்கப்பட்டதால் நிச்சயதார்த்தம் தடைப்பட்டதும் ஆடியோ வாயிலாக கேட்டதாக எழுதி உள்ளார். மேலும். தங்களது மகளின் நிச்சயதார்த்தம் தடை செய்யபட்டதை அறிந்து மன வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதே போன்ற முக்கிய குடும்ப நிகழ்வுகளில் காவல் அதிகாரிகள் விடுப்பு மறுக்கக்கூடாது என்பதை மேலதிகாரிகளிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாகவும், வரும் நாட்களில் மகளின் நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடத்த ஏதுவாக போதுமான நாட்கள் விடுப்பு வழங்குமாறு மாவட்ட எஸ்.பிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: தப்ப முயன்ற ரவுடி மீது துப்பாக்கி சூடு - தாம்பரம் காவல் ஆணையர் விளக்கம்