சென்னை: பலகோடி ரூபாய் அந்நியச் செலாவணி மோசடி புகார் தொடர்பாக அமலாக்கப் பிரிவு அனுப்பிய சம்மனை ரத்து செய்யக்கோரி, ஜிஐ டெக்னாலஜி லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் அதன் நிர்வாகி ராமு அண்ணாமலை ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடார்ந்திருந்தார்.
அந்த வழக்கில், தனது இடத்தில் நடத்தப்பட்ட அமலாக்கப் பிரிவு சோதனையை செல்லாது என அறிவிக்க வேண்டும். விசாரணை என்ற பெயரில் தன்னை துன்புறுத்தக்கூடாது எனவும் விசாரணையை நியாயமாகவும், நேர்மையாகவும் நடத்தவேண்டும், தனக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்யவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்பு நடைபெற்றது. அப்போது அமலாக்கப்பிரிவு சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ரமேஷ், தனது வாதத்தில் அமலாக்கப்பிரிவு சம்மன் அனுப்ப சட்டப்படி முழு அதிகாரம் உள்ளது என்றும், மனுதாரருக்கு சம்மன் அனுப்பப்பட்ட பிறகே சோதனை நடத்தப்பட்டது என்றும் வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், சம்மன் அனுப்ப அமலாக்கப்பிரிவுக்கு சட்டப்படி முழு அதிகாரம் உள்ளது. மேலும், இது தொடர்பாக வழக்கு தாக்கல் செய்ய முடியாது என்று உத்தரவிட்டுள்ளார்.
சோதனை அறிக்கையை மனுதாரருக்கு வழங்கவேண்டும் என்றும், அமலாக்கப்பிரிவு சட்டத்திற்கு உள்பட்டு விசாரணை நடத்தலாம் என்றும், விசாரணைக்கு மனுதாரர் உரிய ஒத்துழைப்பு அளிக்கவேண்டும் என்றும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
இதையும் படிங்க:ரூ.1000 கோடி வருவாயை மறைத்த சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம்