சென்னை: போலி ஆவணங்கள் கொடுத்து வங்கியில் ரூ.200 கோடி ரூபாய் கடன் வாங்கி ஏமாற்றிய வழக்கில் பிரபல நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.82 கோடி சொத்துக்களை அமலாக்கதுறை முடக்கியுள்ளனர்.
சென்னையை மையமாக கொண்டு பல்வேறு இடங்களில் செயல்படும் எஸ்.எல்.ஓ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் இயக்குனராக அனில் குமார் ஓஜா,சுனிதா ஓஜா, அருண் குமார் சர்மா, மம்தா சர்மா ஆகியோர் இருந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் போலியான ஆவணங்களை கொடுத்து கெல்லீஸ் பகுதியில் உள்ள கார்ப்பரேஷன் வங்கியில் ரூ.201 கோடி கடனாக பெற்று மோசடியில் ஈடுபட்டதால் வங்கி அலுவலர்கள் புகார் அளித்தனர்.
இதன் பேரில் எஸ்.எல்.ஓ நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். மோசடி செய்யப்பட்ட பணத்தில் முறைக்கேடாக சொத்துக்கள் வாங்கி குவித்தது தெரியவந்தது.
இதனையடுத்து எஸ்.எல்.ஓ நிறுவனத்தின் இயக்குனர்களுக்கு சொந்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் உள்ள ரூ.82.83 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கதுறையினர் முடக்கியுள்ளனர்.
இது தொடர்பாக அமலாக்கதுறையினர் சம்மந்தப்பட்ட நிறுவன இயக்குனர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சசிகலா, இளவரசன், சுதாகரன் சொத்துக்கள் முடக்கம்!