உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது போடப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் திட்டங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டுவருகின்றன பல கட்டங்களால் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலும் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுவருகின்றன. அதன்படி, 4000 கோடி ரூபாய் மதிப்பில் சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் சியட் நிறுவனத்தின் டயர் உற்பத்தி தொழிற்சாலையை தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர், ”வணிக உற்பத்தியை சியட் நிறுவனம் தொடங்கியுள்ளது அதற்கு பாராட்டுக்கள். வாகன உற்பத்தியைப்போல் டயர் உற்பத்தியிலும் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது. இரு சக்கர வாகனங்கள் முதல் போர் விமானங்கள் ரை அனைத்திற்கும் தமிழ்நாட்டில் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
இந்தியாவில் 40% டயர் உற்பத்தி தமிழ்நாட்டில்தான் நடைபெறுகிறது. முதலீட்டு திட்டங்களை ஆய்வு செய்து உத்தரவு வழங்க உயர்மட்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தொழிற்சாலைகளை ஊக்குவிக்க சிறப்பு சலுகைகளை அரசு உருவாக்கியுள்ளது. ஆசியாவிலேயே முதலீடுகளை ஈர்க்கும் சக்தி உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். சமூக மேம்பாடு, பொருளாதார வளர்ச்சி என அனைத்திலும் சிறந்து விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. சியட் நிறுவனம் ஆராய்ச்சி துறையையும் சென்னையில் தொடங்க வேண்டும். 40% பெண்கள் இங்கு பணியாற்றுவது வரவேற்கப்படுகிறது. இந்த தொழிற்சாலைக்கு தேவையான தண்ணீர் வழங்கப்படும்” என்றார்.
முன்னதாக, தமிழ்நாடு அரசின் தொழில்துறைக்கும் சியட் நிறுவனத்திற்கும் கடந்த 2018ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டது. இந்தியாவில் பெரும் நிறுவனங்களில் ஒன்றான சியட் நிறுவனம் டயர் மற்றும் டயர் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்துவருகிறது.இந்த புதிய தொழிற்சாலை திறக்கப்படுவதன் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.