தமிழ்நாடு சட்டப்பேரவை வரும் 14ஆம் தேதி கூடவுள்ள நிலையில், அது தொடர்பான அலுவல் ஆய்வுக்கூட்டம், தலைமைச் செயலகத்தில் உள்ள பேரவைத் தலைவர் அறையில் நடைபெற்றது. பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் நடைபெற்ற இதில், திமுக சார்பில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட அலுவல் ஆய்வுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய துரைமுருகன், “அரசு மருத்துவமனைகளில் கரோனாவிற்கு சரியான சிகிச்சை அளிக்கப்படுவதில்லை. தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு லட்சக்கணக்கில் பணம் வாங்குகின்றனர். மாநில அரசுகளிடம் கருத்து கேட்காமல், அதன் உரிமைகளை மதிக்காமல், மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த முனைகிறது. மேலும், வேறு எதிலும் கவனம் செலுத்தாமல், இந்தியை திணிப்பதில் மட்டுமே மத்திய அரசு கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறது.
இப்பிரச்னைகள் குறித்தெல்லாம் பேரவையில் பேச வேண்டியிருக்கிறது. அதனால் 7 அல்லது 5 நாட்கள் பேரவையை நடத்த கோரிக்கை வைத்தோம். ஆனால், எதிர்க்கட்சிகள் சொல்வதை அரசு கேட்கத் தயாராக இல்லை. மூன்று நாட்கள் தான் நடுத்துவோம் என்று கூறிவிட்டனர். ஏதோ கடமைக்காக இந்த அரசு சட்டப்பேரவையை கூட்டுகிறது“ என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: 'மத்திய அரசின் இந்தித் திணிப்பால் கொதித்தெழும் தமிழ்நாடு' - வைகோ எச்சரிக்கை