தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், சட்டப்பேரவை விவாதத்தின்போது பேசிய விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் பெயரைக் குறிப்பிட்டு ‘ஜல்லிக்கட்டு நாயகர்’ என்று புகழ்ந்தார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், “ஆளும் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசும்போது ஒவ்வொரு முறையும் துணை முதலமைச்சரை ‘ஜல்லிக்கட்டு நாயகர்’ என்கின்றனர். அவர் என்ன மாடு பிடி வீரரா? எப்போதாவது காளைகளை அடக்கியுள்ளாரா? குறைந்தது எங்களை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு அழைத்துச் செல்வாரா? இதை நீங்களே அவரிடம் கேட்டு சொல்லுங்கள்” என்றார்.
பின்னர், மற்றொரு கேள்விக்கு பதில் அளித்து பேசிய சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர், ஜல்லிக்கட்டுக்காக நாடே போராட்டம் நடத்தியபோது அதனை நடத்துவதற்கு சிறப்பு அனுமதியை பெற்றுத் தந்தவர் ஓபிஎஸ்தான் என்றும், எனவே தான் அவரை ஜல்லிக்கட்டு நாயகன் என்று அழைப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், தனது தொகுதிக்குட்பட்ட விராலிமலை பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி பிரமாண்டமாக நடைபெறும் என்று தெரிவித்த அமைச்சர் விஜய பாஸ்கர், அதற்கு தாங்கள் சிறப்பு அழைப்பாளராகவோ அல்லது மாடு பிடி வீரராகவோ வந்து கலந்துகொள்ளலாம் எனவும் துரைமுருகனுக்கு அழைப்பு விடுத்தார்.