விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி முன்னிலையில் நடைபெற்ற, போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு பிரம்மாண்ட உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் 3000 க்கு மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
அப்போது பேசிய அமைச்சர், "கிராமப்புற மற்றும் நகர்ப்புற மாணவச் செல்வங்களாகிய நீங்கள் உங்கள் பகுதியில் போதைப் பொருட்களின் விற்பனை நடைபெற்றால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு மாணவ, மாணவிகளும் சிறு வயதிலேயே போதை பொருட்கள் ஒழிப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.
போதை பொருட்களை ஒழிப்பது மாணவராகிய உங்கள் கையில் தான் உள்ளது. மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது என்பதற்காகவே தமிழக முதல்வர் இது போன்ற போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தி உறுதிமொழியை ஏற்க சொல்கிறார்.
மாணவ செல்வங்களான நீங்கள் தமிழக அரசு வழிகாட்டுதலின் பேரில் விழிப்புணர்வோடு இருந்து போதைப் பழக்கத்திற்கு யார் அடிமையாக இருந்தாலும் அவர்களை திருத்துவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
தங்களது பகுதியில் எங்காவது கள்ளத்தனமாக கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்தால் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலைய அதிகாரிக்கு தகவல் கொடுக்க வேண்டும். மேலும், உங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாரேனும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகியிருந்தால் அவர்களை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்க முயற்சி செய்ய வேண்டும்.
மேலும், அமைச்சர் செஞ்சி மஸ்தான் பேசுகையில்: தமிழக முதல்வர் தற்பொழுது பள்ளி கல்லூரி மாணவர்கள் இடையே போதை பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அலுவலகங்கள் என அரசு சார்ந்த அலுவலகத்தில் போதைப் பழக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் உறுதிமொழியை ஏற்கப்படும்.
மேலும், இளம் தலைமுறையான நீங்கள் போதை என்ற அரக்கனிடம் சிக்கி விடக்கூடாது. மாணவர்களாகிய நீங்கள் போதைப் பொருட்கள் இல்லா மாவட்டமாக விழுப்புரம் திகழ சமுதாய அக்கறையோடு செயல்பட வேண்டும் என அமைச்சர் பொன்முடி கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்த கோரி கிராம மக்கள் போராட்டம்