சென்னை: உத்தரப்பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில தேர்தல் முடிவுகளில் 4 மாநிலங்களில் பாஜக ஆட்சி அமைக்கிறது. அதனைத் தமிழ்நாடு பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை நிர்வாகிகளுடன் இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து கொண்டாடினார்.
செய்த செலவிற்கு வரியேற்றம்
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, 'இனி 20%-க்கும் அதிகமாக மின் கட்டணம் உயரும் என்பது உறுதி; தற்பொழுது தான் மேயர் தேர்தல் முடிந்த நிலையில், கொலுசு போன்ற பரிசுப் பொருட்களுக்காக செய்த செலவினை எடுக்க வேண்டும். இதற்காக விலையேற்றமும், வரி உயர்வும் இருக்கும்.
உ.பி-ல் போட்டியிட்ட இடங்களில் 60%-க்கும் மேல் வெற்றி பெற்று, 33ஆண்டுகளுக்குப் பிறகு ஆளும் கட்சி, மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மணிப்பூரில் பாஜக கடுமையான உழைப்பால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது. மோடியுடன் இணைந்து பயணிப்போம் என மக்கள் உறுதியாக உள்ளனர்.
பாஜகவிற்கு மக்களின் அங்கீகாரம்
பாஜகவிற்கு கோவாவில் 2017ஆம் ஆண்டு 13 உறுப்பினர்கள் மட்டுமே இருந்த நிலையில், இம்முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க உள்ளது. சிறுபான்மையினர் அதிகமாக உள்ள மணிப்பூரில், அங்குள்ளவர்கள் பாஜகவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் வழங்கியுள்ளனர். இதேநிலை விரைவில் தமிழ்நாட்டில் வரும்.
2026ஆம் ஆண்டு வருமா, 2024ஆம் வருமா என்பது தெரியவில்லை. ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. கரோனாவினை கையாண்ட விதத்திற்கு மக்கள் வழங்கிய பரிசு தான் இந்த வெற்றி.
காங்கிரஸ் ஓரங்கட்டப்பட்டது
காங்கிரஸ் கட்சி பொய்யை மட்டுமே பேசி ஆட்சியை அமைத்திடலாம் என நம்பியது; ஆனால், ஆண்ட கட்சி இப்படி மாறியதற்கு, மக்கள் பொய்பேசினால் ஏற்க மாட்டார்கள் என்பது இத்தேர்தல் மூலம் தெரிந்துள்ளது.
மலிவு அரசியல் செய்த காங்கிரஸ் கட்சி முழுமையாக ஓரங்கட்டப்பட்டுள்ளது. ஆட்சியில் இருக்கும் 2 மாநிலங்களில் மீண்டும் தேர்தல் வந்தால் அங்கும் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும். இதனைப் பார்க்கும் போது, தேசிய அளவில் பாஜகவிற்கு மாற்று அரசியல் கட்சி இல்லை.
திராவிட அரசியலும் களையும்
தமிழ்நாட்டில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறான வழிகாட்டுதல்களை வழங்கி வருவதை அவர் உணர வேண்டும். மத்திய அரசு எதை செய்தாலும் திமுக ஏட்டிக்குப் போட்டியாக செய்து வருகிறது. திமுகவின் அலை கும்மிடிப்பூண்டியைத் தாண்டி எங்கும் வீசவில்லை. முதலமைச்சர் தலைவராக இல்லை; கேளிக்கை பொருளாகத் தான் உள்ளார்.
தமிழ்நாட்டில் குடும்ப அரசியலை மேற்கொண்டு வரும், திமுகவினை மக்கள் உணர்ந்து, விரைவில் முதலமைச்சர் பாஜகவுடன் இணக்கமாக செயல்படும் நிலை வரும் என்ற நம்பிக்கை உள்ளது. கும்மிடிப்பூண்டியைத் தாண்ட முடியாத திமுக 3ஆம் கட்சியை எப்படி உருவாக்க முடியும்?
இன்று முதல் திமுகவின் சிந்தனை மாறும். திமுக நேற்று வரை வேறு மாதிரியாக சிந்தித்த நிலையில், இன்று முதல் மாறும். ஜனநாயகம் கெட்டுப்போக முக்கியக்காரணம் குடும்ப அரசியல் தான்; விரைவில் தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். விதி 356யை காங்கிரஸ் அதிக முறை பயன்படுத்தியுள்ளது. மது விலை உயர்வு பற்றி தான் மக்கள் பேசிக்கொண்டு உள்ளனர். ரூ.35 ஆயிரம் கோடி வருவாய் இதில் முன்பே உள்ளது. இதில் தான், அரசு செயல்படுகிறது. இது தான் திராவிடன் மாடல் ஆட்சியா?
மோடிக்கே வரவேற்பு
சூரியகாந்தி எண்ணெய் 86% உக்ரைனிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. உக்ரைன் போரினால் இறக்குமதி செய்யப்படாது, இதற்கும் மத்திய அரசும் மோடியும் தான் காரணமா? உக்ரைனின் இளம் எம்.பி., மோடியைத்தலையிட்டு போரை நிறுத்த வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார், இந்தளவிற்கு மோடி வளர்ந்துள்ளார். உலக அளவில் மோடிக்கான வரவேற்பு அதிகரித்துள்ளது.
தமிழ்நாடு, கர்நாடக காங்கிரஸுக்கும் கள்ள உறவு ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களிடம் ஏன் எந்த கேள்வியும் எழுப்பவில்லை? தமிழ்நாடு மக்களின் உரிமையை விட்டுக்கொடுக்க திமுக தயாராக உள்ளதா?' என்றவாறு பல கேள்விகளை எழுப்பினார்.
இதையும் படிங்க: உ.பியில் மீண்டும் ஆட்சி அமைக்கிறார் யோகி ஆதித்யநாத்...