சென்னை: தமிழ்நாட்டில் பாரத ரத்னா அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாள் "சமத்துவ நாள்" ஆகக் கொண்டாடப்படும் என்று நேற்று (ஏப்.13) தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இன்று சட்டமேதை அண்ணல் அம்பேத்கரின் 132ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னையில் உள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் உள்ள அம்பேத்கரின் திருவுருவச் சிலைக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பிறகு சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்வில், திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள், விசிக தலைவர் திருமாவளன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சமத்துவ நாள் உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதேபோல, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர் செல்வம் சென்னை ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அம்பேத்கரின் திருவுருவச்சிலையின்கீழ் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளிட்டப் பலர் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அம்பேத்கரின் சிலைக்கு மாலை அணிவித்தும் மலர்த்தூவியும் மரியாதை செலுத்தினர்.
இதையும் படிங்க: 'அம்பேத்கர் பிறந்தநாள் சமத்துவ நாளாக அறிவிப்பு' - கார்த்திக் சிதம்பரம் எம்.பி., வரவேற்பு