கீழ்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைக்கு, கிண்டி ரோட்டரி சங்கம் சார்பில் பல்வேறு வகை மருத்துவ உபகரணங்கள் மற்றும் மினி பேருந்து வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஆகஸ்ட் 5) நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, “கரோனா அறிகுறிகள் ஏதேனும் தென்பட்டால் மக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வர வேண்டும். ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை பெறும்போது விரைந்து குணமடைய முடியும்.
மாநிலத்தில் இதுவரை 2 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். கரோனா சிகிச்சை மையங்களாக இல்லாத மருத்துவமனைகளில் ஏற்படும் இறப்புகளை தெரிவிக்க சிறிது கால தாமதம் ஆகிறது. இது குறித்து ஏற்கனவே விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. கரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை விட, தொற்று பாதித்தவர்களுக்கு ஏற்கனவே உள்ள நோய்களின் காரணமாக ஏற்படும் உயிரிழப்புகள்தான் அதிகமாக இருக்கிறது. இறப்பு எண்ணிக்கை கண்டு அச்சம்கொள்ள தேவையில்லை“ என்று கூறினார்.
இதனைத் தொடர்ந்து ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கரோனா நோயாளிகளுக்காக கூடுதலாக அமைக்கப்பட்டுள்ள படுக்கைகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் ஆய்வு செய்தார். ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கரோனா சிகிச்சைக்கென கூடுதலாக 1000 படுக்கைகள், 150 அவசர சிகிச்சை படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: அனகாபுத்தூர் நகராட்சி ஆணையருக்குக் கரோனா - பணியாளர்களுக்குப் பரிசோதனை