சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மருத்துவர். ரவீந்திரநாத் சென்னை சேப்பாக்கத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்த இடங்களை தமிழ்நாடு அரசு, நிதி ஆயோக்கின் வற்புறுத்தலால்,கௌரவ மருத்துவர்கள் மூலம் நிரப்பப்பட உள்ளது. 11.12.2019 ஆம் நாளிட்ட தமிழ்நாடு அரசின் சுற்றறிக்கையும் இதை உறுதி செய்துள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 1,884 காலி பணியிடங்களை எம்ஆர்பி தேர்வு மூலமாக நிரப்பிட , கடந்த 9.12.2018 இல் எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது.
அதன் மூலம், 856 மருத்துவர்கள் மட்டுமே பணியில் சேர்ந்துள்ளனர். மீதமுள்ள 1,028 பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் பணியில் சேரவில்லை. அந்தக் காலி பணியிடங்களில், எம்ஆர்பி தேர்வில் வெற்றி பெற்றவர்களை உடனடியாக நியமிக்க வேண்டும். அதை விடுத்து, ஒப்பந்த அடிப்படையிலோ,கௌரவ அடிப்படையிலோ மருத்துவர்களை நியமிக்கக் கூடாது.
அதைப் போலவே, மருத்துவக் கல்லூரிகளுக்கு,கௌரவப் பேராசிரியர்களை பணி நியமனம் செய்து கொள்ளவும், அவர்களுக்கு ஊதியம் நிர்ணயித்து வழங்கிடவும், மருத்துவக் கல்லூரிகளை தமிழ்நாடு அரசு வற்புறுத்துகிறது. வெளிநாட்டினரையும், வெளி மாநிலத்தவரையும், பேராசிரியர்களாக கௌரவ அடிப்படையில் பணி நியமனம் செய்ய தமிழ்நாடு அரசு முயல்கிறது. இப்பணி நியமனம், வேலை வாய்ப்பின்றி உள்ள இளம் மருத்துவர்களின் வேலைவாய்ப்பை பாதிக்கும். இந்த முயற்சியையும் அரசு கைவிட வேண்டும்.
நிதி ஆயோக் மாவட்ட மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரிகளை தனியார் தொடங்கிட அனுமதிக்க வேண்டும் என மாநில அரசுகளை நிரபந்தித்து வருகிறது. அது தொடர்பாக வரும் ஜனவரி 21ஆம் தேதி அன்று டெல்லியில் ஒரு கூட்டத்தையும் நடத்த உள்ளது. மாவட்ட மருத்துவமனைகள் தனியார்மயமானால், அது இளம் மருத்துவர்கள் , செவிலியர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் வேலை வாய்ப்பை பறித்துவிடும். மேலும், பொது சுகாதாரத்துறையையே வலுவிழக்கச் செய்துவிடும். அதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர் “ என்றார்.
இதையும் படிங்க: மதம் என்பது வழிபாடுக்கு மட்டுமே: வெங்கையா நாயுடு பேச்சு