இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்க தேசிய தலைவர் ஜெயலால் மற்றும் மாநிலத் தலைவர் ராமகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசும்போது, ”இந்தியாவில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி போன்ற பல மருத்துவ முறைகள் இருந்தாலும் ஆங்கில மருத்துவ முறையே மக்களால் அதிக அளவில் பின்பற்றப்படுகிறது.
பாரம்பரிய மருத்துவ முறைகளும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால் அவற்றையும் ஆங்கில மருத்துவ முறையோடு இணைத்து கலப்பட மருத்துவ முறையை மத்திய அரசு கொண்டுவர இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதனை கண்டித்து வரும் பிப்ரவரி 1 முதல் 14 ஆம் தேதி வரை நாடு முழுவதும் 50 இடங்களில், தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். இதில் மருத்துவர்கள், மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கின்றனர். தமிழகத்தில் சென்னை, திருச்சி ,கோயம்புத்தூர், ஈரோடு, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய இடங்களில் இப்போராட்டம் நடைபெறும்.
ஆங்கில மருத்துவத்தில் எம்எஸ் படிக்கும் மருத்துவர்கள், அதற்குரிய அறுவை சிகிச்சை பயிற்சியினை பெறுகின்றனர். ஆயுர்வேதா, சித்தா, யுனானி போன்ற படிப்புகளில் எம்எஸ் படிக்கும் மாணவர்களுக்கு அவ்வாறான பயிற்சி மேற்கொள்வதில்லை. ஆனால், அவர்களும் அறுவை சிகிச்சை செய்யலாம் என கலப்பட மருத்துவ முறையில் மத்திய அரசு கூறுகிறது. ஆயுர்வேதா, சித்தா, யுனானி மருத்துவத்தின் தரத்தை உயர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் கலப்பட மருத்துவ முறையை கைவிட வேண்டும்.
14 நாட்கள் நடைபெறும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு பிறகும் ஒருங்கிணைந்த மருத்துவ முறையை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால், அடுத்தக்கட்ட போராட்டம் குறித்து அறிவிக்கப்படும்” என்றனர்.
இதையும் படிங்க: கைவிரலில் அறுவை சிகிச்சை மேற்கொண்ட சிறுமி உயிரிழப்பு: மருத்துவமனை முன்பு பெற்றோர் போராட்டம்!