மதுரை: தமிழ்நாடு செவிலியர் சங்க பொருளாளர் ஆரோக்கியம், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.
அதில், " மதுரை முனிச்சாலை இஎஸ்ஐ மருத்துவமனையில் ஆண் செவிலியராக பணியாற்றுகிறேன். கரோனா பேரிடர் காலம் என்பதால் மேலூர் கரோனா மையத்திற்கு மாற்றப்பட்டேன். கரோனா கால பணியின்போது உணவு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதி போதுமானதாக இல்லை. பணி முடித்து, தினசரி வீட்டிற்கு தான் செல்ல வேண்டியிருந்தது.
இதனால் கரோனா பரவல் அதிகரிக்கக் கூடும். எனவே, கரோனா கால பணியில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்துவித மருத்துவப் பணியாளர்களுக்கும் உணவு மற்றும் தங்குமிட வசதியை ஏற்படுத்தி தருமாறு உத்தரவிட வேண்டும்" என கோரியுள்ளார்.
இந்த மனுவை நீதிபதி ஜெ.நிஷாபானு நேற்று(ஜூன் 2) விசாரித்தார். இதே போன்ற வழக்குகள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் உள்ளதால், இந்த மனு மீதான விசாரணையை அந்த அமர்வுக்கு மாற்றி நீதிபதி உத்தரவிட்டார்.