இந்த நவயுக காலத்திலேயே மக்கள் படிப்பதற்கு பாடுபடவேண்டிய நிலையில் பெண்ணடிமைத்தனம் ஊறிய காலத்தில் பள்ளி, கல்லூரி மட்டுமல்லாமல், பணியிலும் தனியொரு பெண்ணாக நின்று சாதனை புரிந்தவர். இன்று கல்வி கற்க பல்வேறு இடையூறு இருக்கும் சூழலில் அன்று முத்துலட்சுமிக்கு அவரது பாலினம் இடையூறாக அமைந்தது. அக்காலகட்டத்தில் தற்போதுள்ள அரசியல் தலைவர்கள் போல் அப்போதைய அரசியல் தலைவர்கள் இல்லாத காரணத்தினால் அவரால் முன்னேற முடிந்தது.
அன்றிலிருந்து இன்றுவரை சாதிய அடிப்படையிலான, பாலின அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் வார்த்தையளவில், அரசியல் கட்சிகளின் கொள்கையளவில் மாற்றமடைந்திருந்தாலும் சமூகத்தில் மாற்றமடையாமல்தான் உள்ளன. அதை உறுதிபடுத்தும் வகையில் பல அரசியல் நிகழ்வுகள் நடைபெற்றன, நடைபெறுகின்றன.
இன்று இந்திய மாணவர்களின் கல்வி தரத்தை உலகளவு கொண்டு செல்வதற்கான முயற்சியாக மத்திய அரசு புதிய கல்விக் கொள்கையை உருவாக்கி சமூகத்தில் பரபரப்பை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு முன்னரே கல்வி வளர்ச்சி குறித்து ஆய்வு மேற்கொண்டவர் முத்துலட்சுமி. ஆனால் இன்று கல்வி, வேலைவாய்ப்பு என அனைத்திலும் சாதிய பாகுபாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அவற்றை தடுக்க எந்த அரசியல் அமைப்பும் முன்வரவில்லை.
மருத்துவத் துறையில் பல சாதனைகள் புரிந்தமைக்காக அவரது பிறந்தநாள் மருத்துவ தினமாக அனுசரிக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது அவருக்கு தமிழ்நாடு அரசு அளிக்கும் கவுரவமாக நினைக்கிறது. இது பெருமைக்குரிய ஒன்றுதான். ஆகினும், ஒருவருக்கான அங்கீகாரமானது அவரது கொள்கைகளையும், லட்சியங்களையும் தன்னுடையதாக கொண்டு செயல்படுவதில் அடங்குகிறது. அப்படி இருக்கையில் தமிழ்நாடு அரசோ சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு மருத்துவ வசதிகளில் பின்னோக்கியே சென்றுள்ளது. இச்சமயத்தில் அவருக்கு அளித்த கவுரவங்கள் அனைத்தும் நீர்த்துப் போகின்றன.
மேலும், முத்துலட்சுமி ரெட்டியை மருத்துவர் என்ற கோட்டிற்குள் நிறுத்திவிடவும் முடியாது. ஏனெனில் அவர் ஒரு கல்வியாளர், அரசியல் தலைவர், கல்வி ஆலோசகர், சமூகப் போராளி, பெண்ணியவாதி என அவருடைய அடையாளங்கள் நீள்கின்றன. அப்படி இருக்கையில் வெறும் மருத்துவராக மட்டும் அவரை காண்பது இயலாத காரியம்.
மோசமான, எதிர்ப்புகள் நிறைந்த சூழலுக்கு நடுவே அவர் உறுதியுடன் போராடி தனது கனவுகளுக்கு வடிவம் கொடுத்தார். ஒற்றை பெண்ணாக சென்னை மாகாணச் சட்டப்பேரவை உறுப்பினராக நியமிக்கப்பட்ட டாக்டர் முத்துலட்சுமி, தன் மக்களின் நலனுக்காக பல எதிர்ப்புகளைக் கடந்து இன்றளவும் மக்களால் பேசப்படும் பல திட்டங்களை செயல்படுத்தினார். ஆனால் நாமோ கருத்துச் சுதந்திரங்களை பறிகொடுத்து அடிப்படை உரிமைகளை கேட்கவும் தகுதியற்று நிற்கிறோம்.
இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் நடுத்தர குடும்பத்தில் பிறந்த பெண்ணின் பிறந்தநாளை உலகமே பேசிவருகிறது. அதற்கு காரணம் தான் கொண்ட கொள்கைமேல் அவர் வைத்திருந்த உறுதி. அதுவே, இன்று கூகுள் தனது வலைப்பக்கத்தின் முகப்பு படமாக அவரது புகைப்படத்தை வைப்பதற்கான காரணமாகவும் அமைகிறது. ஒருவரது கொள்கைகளையும், நாட்டிற்காக செய்த அர்ப்பணிப்புகளையும் அவர் வழியிலேயே நினைவு கூர்வதே சாலச் சிறந்தது. இனிவரும் காலங்களில் தலைவர்களின் அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் நினைவு கூர்வதைவிடுத்து, அவர் வழியில் பயணிப்பதை நினைவில் கொள்வோம்.
தான் கொண்ட துறை அனைத்திலுமே அவர் சர்வ வல்லமை பொருந்தியவராகவே காணப்பட்டார். அதுமட்டுமின்றி அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்த பிறகும் அவரது பெயரினால் மக்களுக்கு பல நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. எனவே, அவர் இறந்தும் கொடுக்கும் சீதக்காதியாகவே இருந்துவருகிறார். அதுவே காலம் கடந்து இன்றும் அவரை மக்களும், அரசியல் தலைவர்களும் நினைவுகூர காரணமாக அமைகிறது.