இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”ஊரடங்கு இன்னும் எத்தனை மாதங்களுக்கு என்ற தூரமும், திசையும் அறியாத துயரத்திலும், திகைப்பிலும் இருக்கும் விவசாயிகளுக்கும், புலம்பெயர் தொழிலாளர்களுக்கும், தெருவோர வியாபாரிகளுக்கும், உடனடியாகப் பயனளிக்கும் நிவாரணங்களைக் கொடுக்காமல், அலங்காரப் பேச்சுகள் மூலம் ஏமாற்றி விடலாம் என்று மத்திய பாஜக அரசு நினைத்துக் கொண்டிருப்பது கவலையளிக்கிறது.
ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதைப் பிரதிபலிக்கும் வகையிலேயே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இரண்டாவது நாள் அறிவிப்பும் இருக்கிறது. திமுக தொடர்ந்து வலியுறுத்திவரும், நிதியுதவியை நேரடியாக, உடனடியாக வழங்க மனமின்றி, குறிப்பாக விவசாயிகளுக்கு ’கிரெடிட் கார்டு’ மூலம் கடன் வழங்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அதேபோல் நடைபாதை வியாபாரிகளுக்குப் பத்தாயிரம் ரூபாய் கடனாம். அதுவும், வறுமை பற்றி எரிந்து கொண்டிருக்கும் நேரத்தில், வாழ்வாதாரம் கண்ணுக்கு எட்டும் தொலைவில் இல்லாத நிலையில், இன்னும் ஒரு மாதம் கழித்து அந்தத் திட்டம் வருமாம்.
பேரிடர் நேரத்திலும் வழக்கம் போல் பகட்டு அறிவிப்புகளை வெளியிட்டு ’பாலிடிக்ஸ்’ செய்வதை தயவு செய்து தவிர்த்து விட்டு, துயரில் சிக்கித் திணறிக் கொண்டிருக்கும் ஏழை எளிய நடுத்தரப் பிரிவு மக்களைக் காப்பாற்றும் நேரடி நிதியுதவி நடவடிக்கைகளில் மத்திய நிதியமைச்சர் தாமதிக்காமல் ஈடுபட வேண்டும். இனியும் தாமதம் உயிர்களைப் பலிகொண்டு விடும் என்ற உண்மையை ஆள்வோர் உணர்ந்திட வேண்டும். ஆகவே, விவசாயிகளின் அனைத்து வங்கிக் கடன்களையும் தள்ளுபடி செய்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மூன்று மாதங்களுக்கு தலா 5000 ரூபாய் வழங்க வேண்டும். மேலும், ஒரு கோடிக்கும் மேற்பட்ட நடைபாதை வியாபாரிகளுக்கு 10,000 ரூபாய் நேரடி பண உதவி வழங்கி வறுமை, என்னும் பலிபீடத்திலிருந்து மீட்டுப் பாதுகாத்திட வேண்டும் ” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வீட்டுவசதி துறைக்கு ரூ. 70 ஆயிரம் கோடி!