சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக திமுக செய்தித் தொடர்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறுகையில், ”அதிமுக அரசு கரோனா பரவலின் தொடக்கமான முதல் ஒரு மாதம் நோய் குறித்த எந்த பரிசோதனைகளையும் செய்யவில்லை. அதனால்தான் தற்போது நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. ’ஒன்றிணைவோம் வா’ திட்டம் மக்களுக்கு உதவத்தானே தவிர, அரசியலுக்கல்ல. மேலும், இத்திட்டம் ஊரடங்கிற்கு எதிரானதும் அல்ல. பட்டினியால் மக்கள் துயர்படக் கூடாது எனும் நோக்கத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், இப்பெருமையெல்லாம் திமுகவிற்கு வந்து சேர்ந்து விடுமோ என்று பயந்து, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திமுகவை குற்றஞ்சாட்டி வருகிறார். ஒரு நல்ல அரசாக இருந்திருந்தால், திமுகவின் நடவடிக்கைகளை வரவேற்றிருக்கும்.
தொடக்கம் முதல் இந்நோயை வைத்து அரசியல் செய்வது அதிமுக அரசு தான். குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டுவதுதான் எதிர்க்கட்சியின் கடமை. அலுவலர்கள் சரியாக இருந்தாலும் ஆளும் கட்சியினர் விடமாட்டேன் என்கின்றனர் “ என்றார்.
மேலும், திமுகவில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வி.பி.துரைசாமி குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த டி.கே.எஸ். இளங்கோவன், ஆள் பிடிப்பதில் பாஜகவினர் சாமர்த்தியமானவர்கள் என்றும், ஒருவர் ஏமாந்தது போல் திமுகவில் மற்றவர்கள் ஏமாற மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: மத்திய அரசின் கூட்டணியில் இல்லாத மாநில முதலமைச்சர்களுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்