2019 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட திமுக கூட்டணி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 39 தொகுதிகளை கைப்பற்றி பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது.
காஷ்மீர் விவகாரம், பொருளாதார மந்த நிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரசியல் களம் பரபரப்பு மிகுந்து காணப்படுகிறது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் அக்கட்சி எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது.
இதில் திமுக பொருளாளர் துரைமுருகன், மக்களவை திமுக குழு தலைவர் டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட அனைத்து எம்பிக்களும் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் திமுக தலைவராகப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு செய்திருக்கும் மு.க.ஸ்டாலினுக்கு அக்கட்சியின் எம்பிக்கள் வாழ்த்து தெரிவித்தனர். இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டத் தொடர் முடிவடைந்துள்ளதால், இனி அனைத்து எம்பிக்களும் தொகுதிக்கு சென்று பணியாற்ற வேண்டும் என திமுக தலைமை அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.