சென்னை : ராயபுரம் வேலாயுதபாண்டியன் தெருவில் திமுக மாணவரணி சார்பில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியின் 98 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
திமுக வடசென்னை மாவட்ட செயலாளர் இளைய அருணா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழக அரசு தலைமை கொறடா கோவி.செழியன் பங்கேற்று பொதுமக்கள் 200 க்கும் மேற்பட்டோருக்கு அரிசி, மளிகை பொருட்கள் அடங்கிய நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், "திமுகவில் தொண்டராக இருந்து கட்சி பணியாற்றுபவர்களுக்கு எப்படி கட்சி பதவிகள் வழங்கப்படுகிறதோ, அதேபோல் தான் எளியவன் எனக்கு தமிழக அரசு தலைமை கொறடாவாக முதலமைச்சர் வாய்ப்பு அளித்துள்ளார்.
பெரியாராக, அண்ணாவாக, இவர்கள் இருவரின் உருவமாக இருந்த கலைஞராக, இவர்கள் அனைவரின் ஒட்டு மொத்த உருவமாக தற்போது தமிழகத்தின் தலைவராக ஸ்டாலின் பணியாற்றி வருகிறார்.சென்னையில் ராயபுரம், ஆர்கே நகர், திநகர் என நினைத்து பார்க்க முடியாத தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருப்பது தான் ஸ்டாலினின் வெற்றி பயணமாக ஆரம்பித்திருக்கிறது.
அண்ணா, பெரியார் காலத்தில் கருணாநிதி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றது போல, திமுக உருவான ராயபுரத்தில் இருந்து மாநகராட்சி தேர்தலில் மாபெரும் வெற்றி பெறுவோம் என்ற சூளுரையை ஏற்போம்" என அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை திமுக மாணவரணி பகுதி அமைப்பாளர் டி.ஏ.மோகன் ஏற்பாடு செய்திருந்தார்.
இதையும் படிங்க : 'வாழ்க்கையே விளையாட்டு தான்' - நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர்