நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டத்திருத்த மசோதாவை மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் கொண்டுவந்தார். இதற்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கியக் கட்சியான அகாலி தளம் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, மத்திய அமைச்சரவையிலிருந்தும் வெளியேறியது. காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் இம்மசோதாவிற்கு கடும் எதிர்ப்பை தெரிவித்தன. ஆனால், அதனையும் மீறி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளிக்கிடையே வேளாண் சட்டத்திருத்த மசோதா நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகளின் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இதில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் ரகுமான், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், விவசாயிகளையும், கூட்டாட்சி தத்துவத்தையும் பாழாக்கும் வகையில் பாஜக அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்தும், அதற்கு ஆதரவு அளித்த அதிமுக அரசைக் கண்டித்தும் மாநிலம் முழுவதும் வரும் 28 ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணியளவில், ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதையும் படிங்க: தவறாக பரப்புரை செய்யும் எதிர்க்கட்சிகள் - தமிழ்நாடு பாஜக தலைவர் எல். முருகன்