தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய இரு தொகுதிகளிலும் அதிமுக வெற்றிபெற்றது.
இந்நிலையில், தேர்தல் முடிவு குறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் நடந்த இடைத்தேர்தல்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்தவர்களுக்கு நன்றி.
ஆளும்கட்சியின் பணபலம், அதிகார அத்துமீறல், திட்டமிட்டுக் கிளப்பிய சாதி உணர்வு ஆகியவற்றையும் மீறி, பல்லாயிரக்கணக்கானோர் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்துள்ளார்கள். 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பினை ஏற்கிறோம். அதேபோல புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில், காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது.
திமுக வெற்றிபெற்றால் களிப்பிலாடுவதும் தோல்வியில் துவண்டுவிடுவதும் இல்லை. வாக்களித்தவர்களுக்கு நன்றி சொல்லும் அதேநேரத்தில், வாக்களிக்க மறந்தவர்களின் நம்பிக்கையைப் பெற, தொடர்ந்து உழைப்போம்!" என்று கூறியுள்ளார்.
மேலும் மகாராஷ்டிரா, ஹரியானா ஆகிய இரண்டு மாநிலங்களில் புதிதாக அமையவிருக்கும் அரசுக்கு வாழ்த்து தெரிவித்த அவர், காங்கிரஸ் இரு மாநிலங்களிலும் கைப்பற்றிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொண்டார்.
இதையும் படிங்க: மக்கள் அதிமுக பக்கம்தான் - ஒ.பன்னீர்செல்வம்