சென்னை மந்தைவெளியில் உள்ள ராணி மெய்யம்மை பள்ளியில் மாணவர்களுக்கு இலவச மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகளை வழங்கினர்.
இதன் பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை விடுதலை செய்யும் விவகாரத்தில் தமிழ்நாடு ஆளுநரை நிர்பந்திக்க முடியாது. சிறையில் உள்ள ஏழு பேரும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் முடிவுதான் அதிமுகவின் நிலைப்பாடு. திமுகவை போல் இரட்டை வேடம் போடமாட்டோம். திமுக தலைவர் கருணாநிதி ஏழு பேரில் நளினியை மட்டும் விடுதலை செய்யலாம் என கூறினார். இந்த விவகாரத்தில் ஆளுநர்தான் உரிய முடிவு எடுக்க வேண்டும்.
டி.என்.பி.எஸ்.சி. முறைகேட்டில் சிபிசிஐடி காவல்துறையினர் 41 பேரை கைது செய்துள்ளனர். மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டுக்கு திமுக ஆட்சியில்தான் வழி செய்யப்பட்டது. எனவே இதில் திமுகவின் முக்கியப்புள்ளிகளுக்கு தொடர்பு இருக்கிறது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், குற்றவியல் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
டி.என்.பி.எஸ்.சி. முறைகேடு விவகாரத்தில் திமுகவைச் சேர்ந்த முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் அப்பாவுக்கு தொடர்பு உள்ளது என ஏற்கனவே நான் கூறிய பிறகும், அவர் அமைதி காப்பது ஏன்?
டெல்லி தேர்தலில் நடந்ததைப் போல் தமிழ்நாட்டிலும் நிகழும் என கமல் தெரிவித்திருப்பது, மறைமுகமாக மூன்றாவது முறையாக அதிமுக ஆட்சிக்கு வரும் என்பதாக எடுத்துக்கொள்ளலாம். 2021ஆம் ஆண்டு தேர்தலிலும் வெற்றி பெற்று அதிமுக ஆட்சி அமைக்கும்.
தேமுதிக ஆட்சிக்கு வரும் என பிரேமலதா கூறியது குறித்து கேட்ட போது, ஒவ்வொரு கட்சிக்கும் தன்னுடைய ஆசையை வெளிப்படுத்துவதற்கு உரிமை உண்டு என்றும் அமைச்சர் தெரிவித்தார்.