நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நவம்பர் 14ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின் போது லட்சக்கணக்கானோர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்வது வழக்கம். இதனால், பேருந்து, ரயில் நிலையங்களில் பயணிகளின் கூட்டம் அலைமோதும். ஆனால், தற்போது கரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாதது, பெரும்பாலானோர் சொந்த ஊரிலிருந்தே வேலை பார்ப்பது உள்ளிட்ட காரணங்களால், சென்னையிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு சொந்த ஊருக்குச் செல்வோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இன்றிலிருந்து (நவம்பர் 11) மூன்று நாட்களுக்கு சுமார் 85 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல பேருந்தில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து துறை அலுவலர்கள் கூறியுள்ளனர். மேலும், கரோனா எதிரொலியால் தீபாவளி பண்டிகை அன்று பயணம் செய்வோரின் எண்ணிக்கை 30 விழுக்காடு வரை குறையலாம் என்று தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி) அலுவலர்கள் கூறுகின்றனர்.
திருநெல்வேலி, தூத்துக்குடி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட சில வழித்தடங்களில் 50 விழுக்காடு மட்டுமே பயணிகள் ஏறுவதாக நடத்துநர்கள் கூறுகின்றனர். கரோனா பாதிப்பு காரணமாக பொதுமக்கள் தகுந்த இடைவெளியை கடைபிடிக்கவும், முகக் கவசம் அணியவும் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தொடர்ந்து அறிவிப்பு வெளியிடப்பட்டு வருகிறது.
மக்களின் பாதுகாப்புக்காகவும், ஒரே இடத்தில் அதிக அளவிலான மக்கள் கூடுவதை தவிர்க்கவும் 200க்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் உதவியுடன் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு வரும் பயணிகளுக்கு தேவையான தகவல்களை கூறி உதவுவதற்காக விசாரணை மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், எந்த நடைமேடையில் இருந்து எந்த பகுதிக்கு பேருந்துகள் செல்லும் என்பதை குறிக்கும் வகையில் நுழைவுவாயிலில் பதாகைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்கள் ஐந்து வெவ்வேறு பேருந்து நிலையம் வாயிலாக செல்ல தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, செஞ்சி, வந்தவாசி, சேத்துப்பட்டு, போளூர், நெய்வேலி, சிதம்பரம், வடலூர், காட்டுமன்னார்கோயில், விக்கிரவாண்டி, பண்ருட்டி ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பயணிகள் தாம்பரம் ரயில் நிலையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து செல்ல வேண்டும். கும்பகோணம், தஞ்சாவூர் பகுதிகளுக்கு செல்ல விரும்புவோர் தாம்பரம் சானடோரியம் மெப்ஸ் (அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து) செல்ல வேண்டும்.
புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் ஆகிய பகுதிகளுக்கு (ஈசிஆர்) கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்ல விரும்பும் பயணிகள் கே.கே.நகர் மாநகர பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட வேண்டும். பொன்னேரி, ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி, ஆரம்பாக்கம் ஆகிய பகுதிகளுக்கு செங்குன்றம் வழியாக செல்ல விரும்புவோர் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும்.
காஞ்சிபுரம், செய்யாறு, திருத்தணி, ஆற்காடு, ஆரணி, வேலூர், திருப்பத்தூர், ஓசூர், தர்மபுரி ஆகிய பகுதிகளுக்கு பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து செல்ல வேண்டும். விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், திட்டக்குடி, திருக்கோவிலூர், திருச்சி, சேலம் ஆகிய பகுதிகளுக்கு கோயம்பேடு புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருச்சியில் இருந்து தமிழ்நாட்டின் தென் பகுதிகளுக்கு செல்ல விரும்பும் அனைவரும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் நவம்பர் 13ஆம் தேதி வரை 8,757 சிறப்பு பேருந்துகள் உள்பட 14,757 பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. சென்னையிலிருந்து 3,510 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மறு திசையில் நவம்பர் 15ஆம் தேதியில் இருந்து 18ஆம் தேதி வரை 8,026 சிறப்பு பேருந்துகள் உள்பட 16,026 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
வெளியூர் செல்லும் கோயம்பேடு, பூந்தமல்லி, கே.கே.நகர், தாம்பரம், மாதவரம் ஆகிய பேருந்து நிலையங்களுக்கு பயணிகள் எளிதாக செல்லும் வகையில், நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து இன்று முதல் 13ஆம் தேதி வரை, 24 மணி நேரமும் இயங்கும் 310 சிறப்பு மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
மேலும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் இன்று (நவம்பர் 11) மாலை 7 மணி நிலவரப்படி, 68,604 பேர் பயணித்துள்ளனர். இதுவரை 80,000 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.