சென்னை: சென்னையைச் சேர்ந்த வினோத் பெய்ட் என்பவர், அவரது மகளை கடத்திச் சென்று, வலுக்கட்டாயமாக இஸ்லாத்துக்கு மாற்றியுள்ளதாகவும், வங்கதேசத்தில் வசித்து வரும் அவர், இந்திய குடியுரிமையை துறக்க அனுமதிக்க கூடாது என மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
அவர் தனது மனுவில், தனது மகள் ஹர்ஷிதா பெய்ட், இந்திய குடியுரிமையை துறந்து, வங்க தேச குடியுரிமையை பெற்று விட்டால் அவர் இந்தியா திரும்ப முடியாது எனத் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்த போது, கடத்தப்பட்ட தனது மகளை கண்டுபிடித்து மீட்டுத் தரக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நடந்தது.
அந்த விசரணையில் காணொலி காட்சி மூலம் ஆஜரான ஹர்ஷிதா, தனது சொந்த விருப்பத்தின் காரணமாகவே இஸ்லாத்துக்கு மாறியதாகவும், வங்க தேசத்தைச் சேர்ந்தவரை திருமணம் செய்துள்ளதாகவும், அதை ஏற்றுக் கொண்டு ஆட்கொணர்வு மனு முடிக்கப்பட்டதும் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.
அதேபோல மகளை கடத்தியதாக வினோத் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய தேசிய புலனாய்வு முகமையும், வழக்கை முடித்து பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டது. இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, தனது மகள் இந்திய குடியுரிமையை துறக்க அனுமதிக்க கூடாது என உத்தரவிடக் கோரிய வினோத் பெய்ட் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிங்க:வடபழனி நிதி நிறுவன கொள்ளை.. 4.5 லட்சம் ரூபாய் பறிமுதல்