புதுச்சேரியில் காரைக்கால் நகராட்சிக்கு உட்பட்ட கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தில் உள்ள 25 குடும்பங்களில் உள்ள 290 பேர் "வனத்தாய் குடும்ப உறுப்பினர்கள்" என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் மீன்பிடித்தல், விற்பனை, ஐஸ் கட்டிகள் விற்பனை போன்ற பணிகளை மேற்கொண்டு வாழ்வாதாரம் ஈட்டி வருகின்றனர். இந்நிலையில், வனத்தாய் மீனவ அமைப்பிலிருந்து வீரசோழன் என்பவர் குடும்பத்தினரை நீக்கி உத்தரவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வீரசோழன் தாக்கல் செய்துள்ள மனுவில், ”இதேபோன்ற நிகழ்வுகள் 2018இல் நடந்தபோது மாவட்ட ஆட்சியர் முதல் துணைநிலை ஆளுநர் வரை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. சட்டவிரோத அமைப்பான கட்டப்பஞ்சாயத்தை ஒழிப்பது தொடர்பாக புதுச்சேரி அரசும், சென்னை உயர் நீதிமன்றமும் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்தாலும், கட்டப்பஞ்சாயத்தின் மூலம் ஊரை விட்டு விலக்கி வைப்பது மீனவ கிராமங்களில் தொடர்கிறது.
ஊரைவிட்டு விலக்கி வைத்த உத்தரவால் யாரும் உதவி செய்ய அஞ்சுவதாலும், வேலைக்கு ஆட்களை அமர்த்த தயங்குவதாலும் சமூகத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டுள்ளோம். மாவட்ட ஆட்சியர், துணை ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எங்களை ஊரைவிட்டு விலக்கி வைத்த செட்டியார், நாட்டார், காரியக்காரர், பஞ்சாயத்தார் அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திற்கும், காவல்துறைக்கும் உத்தரவிட வேண்டும்“ எனக் கோரிக்கை வைத்துள்ளார்.
சாதி அடிப்படையில் நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்திற்கு தடை விதிக்க வேண்டுமென இடைக்கால கோரிக்கையையும் அவர் வைத்துள்ளார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, புகாரின் மீது எடுக்கபட்ட நடவடிக்கை குறித்து காரைக்கால் மாவட்ட துணை ஆட்சியர் ஆகஸ்ட் 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
இதையும் படிங்க: செல்போன் திருட்டு வழக்குகள்- காவல்துறை ஆணையர் புதிய உத்தரவு