சென்னை: தண்டையார்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வழக்கறிஞர் அணி நிர்வாகியுமான எம்.கோபிநாத் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், பாஜகவை சேர்ந்த கல்யாணராமன், பெண் பத்திரிகையாளர்கள், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் இஸ்லாமிய, கிறித்துவ மக்களுக்கு எதிராக தொடர்ந்து வெறுப்புணர்வை தூண்டும் வகையிலும், அருவருத்தக்க கருத்துக்களை பரப்பிவருவதாக தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிராக தான் அளித்த புகாரில் வழக்குப்பதிவு செய்த சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அவரை கைது செய்ததாதகவும், பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். பின்னர் விடுவிக்கப்பட்ட கல்யாணராமன், அவதூறாக பேசமாட்டேன் என நீதிமன்றத்தில் அளித்த நிபந்தனை வாக்குறுதியை மீறி தொடர்ந்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கல்யாணராமனுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும், மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் நிலுவையில் உள்ள வழக்கில் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் அவர் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார், மூன்று மாதங்களுக்குள் கல்யாணராமனுக்கு எதிரான வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
இதையும் படிங்க: முதன்முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு - தஞ்சையில் இருந்து களவுபோனநிலையில் கிடைத்தது தகவல்!