பொள்ளாச்சி பாலியல் வழக்கு தமிழகத்தில் அதிா்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் இதை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளாா். அதில், பொள்ளாச்சி சி.பி.ஐ விசாரணைக்கான அரசாணையில் மாணவியின் பெயரைச் சேர்த்து பாதிக்கப்பட்டோரை மிரட்டுவதாக கூறி பழனிச்சாமி அரசை கண்டித்துள்ளாா்.
பொள்ளாச்சி பாலியல் பயங்கரத்தில் மனசாட்சியை மொத்தமாக கழற்றி வைத்துவிட்டு பழனிச்சாமி அரசு அடுத்தடுத்த அக்கிரமங்களைச் செய்து வருதாகவும், அதில் ஒன்றாக சி.பி.ஐ விசாரணைக்குப் பரிந்துரைக்கும் அரசாணையில் புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர், அவர் படிக்கும் கல்லூரி ஆகியவற்றைக் குறிப்பிட்டிருப்பது மிக மோசமான செயல் என கூறியுள்ளாா்.
பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்கள் பற்றிய விவரங்களை வெளியிடக் கூடாது என்று உலகம் முழுக்க கடைபிடிக்கப்படும் நெறிமுறைகளையும், உச்சநீதிமன்றத்தின் அறிவுரைகளையும், பழனிச்சாமி அரசு காலில் போட்டு மிதித்திருக்கிறதாகவும், ஏற்கனவே அந்தப் பெண்ணின் பெயரை காவல்துறை வெளியிட்டு புதிய புகார்கள் வருவதைத் தடுத்து இருப்பதாகவும் அறிக்கையில் குற்றம் சாட்டியுள்ளாா்.