சென்னை: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிக்கையாளர் மன்றத்தில் தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் நெல் அரிசி மொத்த வணிகர்கள் சங்கத்தின் மாநில சம்மேளனத்தை சேர்ந்த வியாபாரிகள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய சங்கத்தின் தலைவர் துளசிங்கம், "மத்திய அரசு கடந்த ஜூன் மாதம் நடத்திய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், அரிசி, கோதுமை மற்றும் அனைத்து அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கும் 5 சதவீத ஜிஎஸ்டி வரியை விதிக்க போவதாக அறிவித்திருந்தது.
ஆனால், அதற்கான அரசாணை வெளியிடவில்லை. மத்திய அரசு அரிசியின் மீது 5 விழுக்காடு வரியை விதிக்கும் பட்சத்தில், சாமானிய மக்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும். இதன் காரணமாக தற்போது இருப்பதை விட, 3 முதல் 5 ரூபாய் வரை அரிசியின் விலை உயர வாய்ப்புள்ளது. இதனால் வேளாண்மை சார்ந்த உணவு உற்பத்தியாளர்கள் பெரிதும் பாதிப்படையக்கூடும்.
இதனை உணர்ந்து மத்திய அரசு அரிசி மீதான ஜிஎஸ்டி வரி விதிப்பு அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இதனை வலியுறுத்தி தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா, உத்தரகாண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் இணைந்து, வரும் 16ஆம் தேதி நாடு முழுவதும் ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் கடையடைப்பு செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 16ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ள நான்காயிரம் அரிசி ஆலைகள், ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளன. இதில் தமிழ்நாடு முழுவதும் இருபதாயிரம் சில்லறை வியாபாரிகள் கலந்து கொள்கின்றனர்" என்று தெரிவித்தார்.