டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்கு ரத்து! - டிடிவி.தினகரன்
சென்னை: அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீதான அவதூறு வழக்கையும், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி மீதான குற்ற வழக்கையும் ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக அமைச்சர்களை விமர்சித்த விவகாரத்தில் தொடரப்பட்ட அவதூறு வழக்கை ரத்து செய்யக்கோரி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி சதீஷ்குமார், அமைச்சர்கள் மீதான கருத்து பொதுப்படையாகத் தான் உள்ளதே தவிர, அரசுப் பணிகளை செய்வதற்கு இடையூறாக இல்லை எனக் கூறி, தினகரனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
அதேபோல, வன்முறையை தூண்டும் விதமாகவும், கலவரத்தை தூண்டும் வகையிலும் பேசியதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி மீது, பிரம்மதேசம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், அன்புமணிக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.