சென்னை: திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு வட்டம் இளையாங்கண்ணி கிராமத்தை சேர்ந்தவர் தங்கமணி. கடந்த 26ஆம் தேதி சாராய விற்பனையில் ஈடுபடுவதாக கூறி திருவண்ணாமலை கலால் காவல்துறையினர் தங்கமணியை கைது செய்து, நீதிமன்ற உத்தரவுபடி கடந்த 27ஆம் தேதி திருவண்ணாமலை கிளை சிறையில் அடைத்தனர்.
அன்றைய தினமே திடீரென வலிப்பு ஏற்பட்டு தங்கமணி உயிரிழந்துவிட்டதாக தங்கமணியின் குடும்பத்தாரிடம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் தாக்கியதால் தான் தங்கமணி உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்துவதாக கூறி உறவினர்கள் குற்றஞ்சாட்டினர்.
இதையடுத்து உயிரிழந்த தங்கமணியை கைது செய்த திருவண்ணாமலை மாவட்ட மதுவிலக்கு குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் ராஜன், கலால் காவல் நிலைய ஆய்வாளர் நிர்மலா, கலால் காவல் நிலைய முதல் நிலை காவலர்கள் ஜெயச்சந்திர, ஜெயக்குமார் ஆகிய 4 பேரையும் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி வடக்கு மண்டல காவல்துறை தலைவத் பிரேம் ஆனந்த் சின்ஹா உத்தரவிட்டுள்ளார்.
இந்த நிலையில் சந்தேகமான முறையில் உயிரிழந்த தங்கமணியின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்து தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். ஏற்கனவே சென்னை தலைமை செயலக காலனி காவல் நிலையத்தில் சந்தேகமான முறையில் மரணமடைந்த விக்னேஷின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கோயில் திருவிழாவில் மோதல்: இளைஞர் கொலை