இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் டி.ராஜா முதன்முதலாக நேற்று சென்னை வந்தார். அவரை நேரில் சந்தித்து கட்சி தோழர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கட்சியின் மாநில அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “சோதனைகளும் சவால்களும் நிறைந்த இந்த காலகட்டத்தில் எனக்கு இந்த பொறுப்பை கட்சி கொடுத்துள்ளது. வாழ்த்து தெரிவித்த அரசியல் கட்சி தலைவர்கள், தமிழறிஞர்களுக்கு நன்றியை உரித்தாக்கி கொள்கிறேன்.
எனக்கு கிடைத்த தகவல்படி வேலூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வெற்றி பெறும் என்று நம்புகிறேன். தேர்தல் என்பது சுதந்திரமாக நடைபெற வேண்டும். அரசியல் சாசனத்துக்கு உட்பட்ட அமைப்பான தேர்தல் ஆணையம் நடுநிலையோடு செயல்பட வேண்டும். அது ஆட்சி செய்பவர்களின் பிடியில் சிக்கி கொள்ளக்கூடாது. எனவேதான் தேர்தல் ஆணையர்களை தேர்ந்தெடுப்பதற்காக தேர்வுக் குழு நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்துள்ளோம்.
அரசாங்கத்தை கேள்வி கேட்கும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் சாராம்சம் முழுவதையும் மோடி தலைமையிவான அரசு சட்ட திருத்தம் கொண்டுவந்து நிலைகுலைய வைத்துள்ளது. நாடாளுமன்றத்தில் அதிக பெரும்பான்மை இருப்பதால் அவர்களுக்கு ஏற்றவாறு சட்டங்களை முன்மொழிந்து நிறைவேற்றி கொள்கிறார்கள். இதனால் நாடாளுமன்றம் மக்களை பிரதிபலிக்கும், ஜனநாயகத்தை காக்கும் இடமாக உள்ளதா என்ற கேள்வி நிலவுகிறது.
மோடி அரசு ஜனநாயக பன்முகத்தன்மையை மதிப்பதாக இல்லை. பாஜக வைக்கின்ற கொள்கைகள் எல்லாம் தற்போதைய இந்தியாவுக்கு மட்டுமின்றி எதிர்கால இந்தியாவுக்கும் கெடுதல் விளைவிப்பவையாக இருக்கின்றது. அந்த வகையில் அவர்கள் கொண்டுரவுள்ள புதிய தேசிய கல்விக் கொள்கை குறித்து பல கேள்விகள் எழுந்துள்ளன.
கல்வியை தனியார்மயமாக்குவது, மதவாதமாக்குவது, மையப்படுத்துவது போன்றவைகளையே கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது. கல்வி குறித்து தீர்மானிக்கின்ற சக்திகள் அனைத்தையும் மோடி அரசு தன்னிடம் குவித்து கொள்ளப் பார்க்கிறது. ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஒவ்வொரு திட்டத்தையும் எடுத்து செயல்படுத்தி வரும் மோடி அரசு, நிதிநிலை அறிக்கையையும் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக அமைத்துள்ளது.
கல்வி, பொது சுகாதாரம் நிதி உயர்த்தப்படாமலும், தொழிலாளர் சட்டங்களை திருத்துகிறோம் என்ற முறையில் தொழிலாளர் விரோத கொள்கைகளை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது. பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கான நிதி குறைக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை அதிகரித்துள்ளது. மகாத்மா காந்தியின் பெயரில் இயங்கி வரும் கிராமப்புற வேலைவாய்ப்புக்கான நிதி ஒதுக்கீடு குறைகிறது.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இடதுசாரி கட்சிகள் ஒன்றுபட்டு இயக்கங்களை நடத்த வேண்டும் என்று டெல்லியில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து பணியாற்றுவதற்கான தேவை வந்துள்ளது. அதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
என்.ஐ.ஏ சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தத்தின்படி யாரை வேண்டுமானாலும் பயங்கரவாதி என்று சொல்லிவிட முடியும். அவர் தான் நிரபராதி என்பதை நிரூபிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. பாஜக அரசுக்கு எதிராக விமர்சனம் செய்பவர்களை தேசத்துரோகிகள் என்று முத்திரை குத்துவது, நகர்புற நக்சல் என்று முத்திரை குத்துவது போன்ற செயல்கள் நடைபெற்று வருகின்றன.
எந்த ஒரு மசோதா முன்வைக்கப்பட்டாலும் அது சம்பந்தப்பட்ட துறையின் நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும். அவர்கள் பரிசீலித்த பிறகு விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்றும், அது மாநிலங்களவைக்கு வரும்போது தேர்வுக் குழுவுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று அனைவரும் வலியுறுத்தி வருகிறோம். ஆனால் இவற்றை மத்திய அரசு செயல்படுத்துவதாக இல்லை. இடஒதுக்கீடு என்பது சமுகநீதிக்கான கொள்கை. அது வறுமை ஒழிப்பு, ஏழ்மை ஒழிப்பு திட்டமில்லை. 10 சதவீத இடஒதுக்கீடு திட்டத்துக்கு எதிரான நிலைப்பாட்டை கூறியுள்ளோம்.
கர்நாடகா, மகாராஷ்ட்ரா மாநிலங்களில் நடப்பதை வைத்து பாஜக அரசு ஜனநாயகத்தை எந்தளவுக்கு மதிக்கிறது என்பதை மக்கள் பார்த்து வருகிறார்கள். அரசு அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் எனபதற்காக ஜனநாயக நெறிகளை காலில் போட்டு அவர்கள் மிதிக்கின்றனர். இதே தான் கோவாவில் நடைபெற்றது” என குற்றம்சாட்டினார்.