சென்னை: யூ-டியூப் சேனல்கள் போன்ற சமூக வலைதளங்களில் ஆபாசமான அருவருக்கத்தக்க வகையில் பேட்டி எடுத்து ஏற்கெனவே பதிவு செய்த காணொலிகளை எல்லாம் உடனடியாக நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை காவல் துறை ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பெண்களிடம் ஆபாசமாகவும், அருவருக்கத்தக்க வகையில் பேட்டியெடுத்து ஒளிபரப்பிய விவகாரத்தில் யூ-டியூப் சேனல் நடத்திய உரிமையாளர், தொகுப்பாளர், ஒளிப்பதிவாளர் ஆகிய மூன்று பேரை அடையாறு காவல்துறையினர் கைது செய்தனர்.
சர்ச்சைக்குள்ளான யூ-டியூப் சேனலுக்குப் பேட்டி அளித்த பெண் ஒருவர் பணம் பெற்றுக் கொண்டு தான் இவ்வாறு பேசியதாகத் தெரிவித்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தன்னுடைய புகாரில் தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டதாக பொய்யான தகவல் தெரிவித்ததால் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணை விசாரிக்க அடையாறு காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர். .
இதேபோன்று ஆபாசமாகப் பேட்டி எடுத்து சமூக வலைதளங்களிலும், யூ-டியூப் சேனல்களிலும், பலரும் வீடியோக்கள் வெளியிட்டு இருப்பதால் அதன் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்தன. ஆபாசமாக, அருவருக்கத்தக்கப் பேட்டி எடுத்து வீடியோக்கள் வெளியிட்ட யூ-டியூப் சேனல்களின் உரிமையாளர்கள், உடனடியாக அந்த வீடியோக்களை நீக்க வேண்டும் என, சென்னை காவல்துறை ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவ்வாறு நீக்காவிட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். ஆபாசமாக பேட்டி எடுத்து வீடியோக்கள் வெளியிட்டால் அவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார். யூ-டியூப் சேனல்களின் பட்டியலை எடுத்து, ஆபாசமாகப் பதிவிடப்பட்ட வீடியோக்களை நீக்கியுள்ளார்களா என்பதை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் கண்காணிக்கவும் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.