கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள வணிக வளாகங்கள், நிறுவனங்கள், அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தையும் ஊரடங்கு முடியும் வரை திறக்கக்கூடாது என அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும்பாலானோர் வீட்டிலேயே இருப்பதால் இணையதளங்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 25 நாட்களில் மட்டும் 10 விழுக்காடு உயர்ந்துள்ளதாக சைபர் கிரைம் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக, பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால் இழப்பு ஏற்படாமல் இருக்க பணியாளர்களுக்கு லேப்டாப் மற்றும் இணைய வசதிகள் செய்து கொடுத்து வீட்டிலிருந்தே பணியை மேற்கொள்ளச் சொல்லியுள்ளனர். இதேபோல் பயன்பாட்டாளர் அதிகளவில் பார்க்கக்கூடிய தலைப்புகளில் லிங்க்கை அனுப்பும் மோசடியாளர்கள் அந்த லிங்க்கை பயன்பாட்டாளர் திறக்கும்போது, அவர்களது மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை ஹேக் செய்து, வங்கிக் கணக்கு விபரங்களைத் திருடி பணத்தை கொள்ளையடிக்கின்றனர். குறிப்பாக இக்கட்டான இந்தச் சூழ்நிலையில், கரோனாவை வைத்தே பணத்தை கொள்ளையடிப்பதும் நடக்கிறது.
ஊரடங்கினால் வருமானம் இன்றி பொதுமக்கள் வீட்டில் முடங்கி இருப்பதால் கடன்களுக்கான இஎம்ஐ தொகையை 3 மாதத்திற்கு தள்ளி வைக்க ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. இதனை சாதகமாக்கிக்கொண்டு வங்கி அலுவலர் போல் போலியாக பேசி தவணையை 3 மாதத்திற்கு தள்ளிவைக்க, தங்களது ஓடிபி (OTP) எண்ணைத் தெரிவிக்க வேண்டும் எனக்கேட்டு பெற்றுக்கொண்டு பணம் முழுவதையும் கொள்ளையடிக்கின்றனர்.
இந்நிலையில், பிரதமரின் வேண்டுகோளுக்கிணங்க பொதுமக்கள் பெருமளவில் கரோனா நிவாரண நிதியை செலுத்தி வருகின்றனர். ஆனால், இதிலும் பல்வேறு போலிக்கணக்குகளை தொடங்கி விஷமிகள் பணத்தைக் கொள்ளையடித்து வருவதால் சரியான பெயரில் பணத்தை செலுத்துமாறு மத்திய அரசு மக்களை அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே, ஊரடங்கு காலத்தில் சைபர் குற்றங்களின் எண்ணிக்கை 10 விழுக்காடு உயர்ந்துள்ளதாகவும், மேலும் சைபர் குற்றவாளிகளை கண்டுப்பிடிப்பது மிகவும் கடினம் என்பதால் பொதுமக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: டிக் டாக் விபரீதம்: லைக் கிடைக்காததால் தற்கொலை செய்த இளைஞர்!