சென்னை: அட்சய திருதியை தினமான இன்று தங்கம் மட்டுமல்ல எது வாங்கினாலும் அது மேலும் வளரும் என்பது மக்கள் மத்தியில் பொதுவான நம்பிக்கை ஆகும். இதனால், தங்கம் அதிக விலைக்கு விற்றாலும் இன்று (மே.5) நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து வாடிக்கையாளர் ஒருவர் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திடம் கூறுகையில், 'ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று நகைகள் வாங்குவது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக நகைகள் வாங்க முடியவில்லை. இன்று நகை வாங்கினால் அது அதிர்ஷ்டத்தையும், வெற்றியையும் தரும் என நம்பிக்கை உள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.
சென்னை நகைக் கடைகளில் அலைமோதிய வாடிக்கையாளர்கள் கூட்டம் அள்ளி விடும் சலுகைகள்; அள்ளிச் செல்லும் வாடிக்கையாளர்கள்: சென்னையில் உள்ள நகைக்கடைகள் அட்சய திருதியையொட்டி, மக்களைக் கவரும் வகையில் சலுகைகள் அறிவித்து இருந்தன. செய்கூலி, சேதாரம் இல்லை; கற்களுக்கு விலை இல்லை உள்ளிட்டப் பல்வேறு அறிவிப்புகளை நகைக்கடைகள் அறிவித்துள்ளன. 'எங்களது கடைகளில் வெள்ளி நாணயங்கள் பல்வேறு வடிவங்கள், வடிவமைப்புகள் மற்றும் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்பவும் வடிவமைக்கப்படும். மேலும், வெள்ளி நாணயங்கள் 10 கிராம், 20 கிராம், 50 கிராம், 250 கிராம், 500 கிராம் மற்றும் 1 கிலோ எடைகளில் கிடைக்கின்றன' என சென்னை தியாகராய நகரில் உள்ள ஒரு நகைக்கடை மேற்பார்வையாளர் தெரிவித்தார். நகைக் கடையில் நகை வாங்க வந்த நடிகை சுகாசினி கரோனா பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு மீண்டும் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விட்டதால் மக்கள் நகை வாங்குவதில் தயக்கம் காட்டாமல் ஆர்வமாகவே இருக்கின்றனர். எனவே, இன்று நகை விற்பனை சிறப்பாக இருக்கும் என அவர் கூறினார். நடிகை சுகாசினி இன்று அட்சய திருதியை முன்னிட்டு, நகைக்கடையில் நகை வாங்க வந்திருந்தார்.
நகைக்கடை உரிமையாளர்கள் மகிழ்ச்சி: கரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக அட்சய திருதியை என்பது கொண்டாடப்படவில்லை. இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு கரோனா கட்டுப்பாடுகள் அனைத்தும் விலக்கி கொள்ளப்பட்டதை அடுத்து மக்கள் இயல்பு நிலைக்கு வந்துள்ளனர். எனவே, கடந்த காலங்களைப்போல விற்பனை அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம் என்று தங்க நகை வியாபாரிகள் நம்பிக்கையில் உள்ளனர்.