சென்னை: கல்வி, பொருளாதாரம், தொழில் நுட்பம், விண்வெளி ஆய்வு என இந்தியாவின் வளர்ச்சி அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் இது போன்ற காலக்கட்டத்தில் நரபலி, சூனியம் போன்ற மூட நம்பிக்கைகளை ஒரு சிலர் நம்பி கொண்டு தான் இருக்கின்றனர். உலகத்தின் பல்வேறு நாடுகளில் மூட நம்பிக்கைகள் இன்னும் முடிவு பெறாமல் உள்ள நிலையில், இந்தியாவிலும் அது தொடர்ந்து கொண்டு தான் இருப்பதற்கு உதாரணம் சமீபத்தில் கேரளாவில் நடந்த நரபலி சம்பவம்.
கடந்த 8 ஆண்டுகளில் (கடந்த 2014 ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டு வரை ) இந்தியாவில் மட்டும் 100 நரபலிகளும் மற்றும் 397 சூனியத்திற்காக கொலைகள் நடந்துள்ளது என்கிறது தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரங்கள்.
புள்ளி விவரங்கள்: குறிப்பாக இந்தியாவில் கடந்தாண்டில் 5 நரபலி சம்பவங்களும், 68 சூனியத்தியற்காக கொலைகளும் நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல கடந்த 2020ஆம் ஆண்டு 11 நரபலி சம்பவங்களும், 88 சூனிய கொலைகளும், 2019ஆம் ஆண்டு 10 நரபலிகளும், 102 சூனிய கொலைகளும் நடந்துள்ளது என்று தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டில் (2021) இந்தியாவில் 20 சூனிய கொலைகள் அதிகம் நடந்து முதல் இடத்தில் இருக்கும் மாநிலம் சட்டீஸ்கர். 18 சூனிய கொலைகள் நடந்து மத்திய பிரதேசம் 2 ஆவது இடத்தில் இருக்கிறது.
நரபலி சம்பவங்களை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு கேரளாவில் 2 சம்பவங்கள் நடந்துள்ளது. சட்டீஸ்கர், தெலங்கானா, இமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு நரபலி சம்பவங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் நரபலி, சூனியத்திற்காக கொலை சம்பவங்கள் எதுவும் பதிவாக இல்லை என்று தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் புள்ளி விவரங்கள் சொல்கிறது.
கேரளா சம்பவம்: சமீபத்தில் கேரளாவில் நடந்த நரபலி சம்பவம் இந்தியாவையே உலுக்கி உள்ளது. இந்தியாவிலேயே கல்வியறிவு அதிகம்மிக்க மாநிலமாக திகழும் கேரளாவில் இச்சம்பவம் நடந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கேரள மாநிலம் பத்தினம்திட்டா மாவட்டத்தில் விரைவில் பணக்காரனாக ஆக வேண்டும் என தம்பதி பகவல்சிங் மற்றும் லைலா சிங் மந்திரவாதி ஷபிக்குடன் இணைந்து இரண்டு பெண்களை 56 துண்டுகளாக வெட்டி நரபலி கொடுத்து அதனை சமைத்து உண்ட சம்பவம் அரங்கேறியது. இந்த நரபலி வழக்கு தொடர்பாக தம்பதி மற்றும் ஷபி ஆகிய மூன்று பேரை காவவல்துறையினர் கைது செய்தனர்.
பத்மா மற்றும் ரோஸ்லின் ஆகியோருக்கு 3 லட்சம் கொடுப்பதாக மந்திரவாதி ஷபி அழைத்து சென்று நரபலி கொடுத்தது தெரியவந்தது. மேலும் அந்த மாவட்டத்தில் 12 பேர் காணாமல் போயுள்ளதால் நரபலி கொடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மூன்று பேரையும் மூன்று வாரங்கள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் இதுகுறித்து மன நல ஆலோசகர் வந்தனா நம்மிடம் கூறுகையில், “தொழிலில் நஷ்டம், நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்ற மன விரக்தியில் உள்ளவர்கள், ஒருவரை நாடும் போது இது போன்று நரபலி கொடுத்தால் நல்ல நிலைமை வந்துவிடலாம் என்று கொடுக்கும் நம்பிக்கையை கண்மூடித்தனமாக நம்பி நரபலி கொடுப்பதாகவும்” என தெரிவித்துள்ளார்
மேலும், ஆளுமை தன்மை கோளாறு காரணமாக இந்த பிரச்சனை ஏற்படுவதாக தெரிவித்துள்ளார். நரபலி கொடுத்துவிட்டு மனித மாமிசம் சாப்பிடுபவர்களை ’கேனிபல்’(cannibal) என்று அழைக்கப்படுவதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட தமிழ்நாட்டுப்பெண்; சோகத்தில் மூழ்கிய சொந்த கிராமத்தினர்