இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் - திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் தங்களது வாழ்வாதாரத்தை அழிக்கும் எட்டுவழிச்சாலை தேவை இல்லை என தொடர்ந்து போராடினார்கள். போராடிய விவசாயிகளை அரசு மிகக் கடுமையான அடக்குமுறை நடவடிக்கைகளை மேற்கொண்டு அவர்களை கைது செய்து, அவர்களின் நிலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்து கருங்கற்களை ஊன்றியது எனக் குற்றஞ்சாட்டியுள்ளது.
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டிய அரசே, மக்களுக்கு எதிராக செயல்பட முனைந்திருப்பது பல எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதனை உணர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
மேலும், முதலமைச்சரின் அறிவிப்பு குறித்து, அதிமுகவின் தோழமைக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன என்பதனை வெளிப்படுத்திட வேண்டும்.
மீண்டும் சாலை அமைக்கும் முயற்சியை அரசு மேற்கொண்டால் விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும், அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் தமிழ்நாடு அரசே முழு பொறுப்பேற்க வேண்டும் என்பதனை தெரிவித்துக் கொள்வதுடன், சேலம்- சென்னை எட்டுவழிச்சாலை அமைக்கும் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும் எனக் கோரிக்கைவிடுத்துள்ளது.