கோவிஷீல்டு தடுப்பூசி விலை உயர்வுக்கு பல்வேறு மாநிலங்கள் அதிருப்தி தெரிவித்த நிலையில், தற்போது 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனவாலா, “மக்களுக்கு சேவை செய்யும் நோக்கத்தில், மாநில அரசுகளுக்கு ஒரு டோஸ் 400 ரூபாய்க்கு கொடுப்பதாக சொல்லியிருந்த தடுப்பூசியை 300 ரூபாயாக குறைக்கிறோம். இது மாநில அரசுகளின் கோடிக்கணக்கான நிதியை மிச்சப்படுத்தும். மேலும் அதிக தடுப்பூசிகளை வாங்கவும், எண்ணற்ற உயிர்களை காப்பாற்றவும் உதவும்’’ என்று கூறியுள்ளார்.
தனியார் மருத்துவமனைகளுக்கு ஒரு தடுப்பூசி ரூ.600க்கும், மாநில அரசுகளுக்கு ரூ.400க்கும் வழங்கப்படும் என கூறியிருந்த நிலையில், தற்போது மாநில அரசுகளுக்கு மட்டும் ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது. இதனால் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொள்ளும் மக்களுக்கு ரூ.200 மிச்சமாகும் என கூறப்பட்டுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி விலையைக் குறைக்க மத்திய அரசும் ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல் வெளியானது.
நாட்டில் இதுவரை 14.78 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. ஜனவரி 16ஆம் தேதி முதல் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தொடர்ந்து 102ஆவது நாளான நேற்று (ஏப்.28) 25,56,182 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இதில் 22,989 அமர்வுகளில் 15,69,000 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். இரண்டாம் கட்டமாக 9,87,182 பேர் கரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
சுகாதாரப் பணியாளர்கள் 93,47,775 பேர் முதல் கட்ட கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர். இதேபோன்று 61,06,237 சுகாதாரப் பணியாளர்கள் இரண்டாம் கட்ட தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.
முன்களப் பணியாளர்களில் 1,22,21,975 பேர் முதல் கட்ட கரோனா தடுப்பூசியையும், 65,26,378 பேர் இரண்டாம் கட்ட தடுப்பூசியையும் செலுத்திக்கொண்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.