தமிழ்நாட்டில் கரோனா நோயின் தற்போதுள்ள நிலைப் பற்றியும், இந்நோய் மேலும் பரவாமல் தடுக்க எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தலைமைச் செயலர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் மருத்துவ வல்லுநர் குழுவுடன் ஆலோசனை நடத்தப்பட்டது.
அந்தக் கூட்டத்தில் தடுப்பூசியைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டில் இதுவரை சுமார் 23 லட்சம் நபர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். சராசரியாக நாளொன்றுக்கு 1.2 லட்சத்திற்கும் குறையாமல் தடுப்பூசி போடப்படுகிறது.
நேற்று (மார்ச் 22) 1.52 லட்சம் நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 3,200-க்கும் மேற்பட்ட நிலையங்களில் தடுப்பூசி போடுவதற்கு ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது.
கோவிட்-19 தடுப்பூசி குறித்து தேசிய வல்லுநர் குழுவில் தமிழ்நாடு உறுப்பினராக இருந்து மாநிலத்தின் கருத்துகளை அந்தக் கூட்டத்தில் எடுத்துரைக்கப்படுகிறது. மேலும் தேசிய வழிகாட்டு நெறிமுறைகளுக்குள்பட்டு தமிழ்நாட்டை மையப்படுத்தி கோவிட் தடுப்பூசிக்கான வழிமுறைகளை வகுத்து, இலக்கு நோக்கி தடுப்பூசி போடுவதற்கான கூடுதல் வழிமுறைகளை உருவாக்க ஒரு வல்லுநர் குழுவை ஏற்படுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதிக பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள், மாநகரங்கள், பகுதிகளில் மத்திய அரசின் விதிகளுக்குள்பட்டு தடுப்பூசி போடுவதைத் தீவிரப்படுத்த இந்த வல்லுநர் குழு வழிவகுக்கும்.
ஏப்ரல் 1 முதல் தடுப்பூசி
தற்போது மருத்துவப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு வயதுவரம்பின்றியும், 60 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும், 45 வயதிலிருந்து 59 வயது வரையுள்ள சர்க்கரை, ரத்த அழுத்தம் போன்ற இணை நோய் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அடிப்படையில் கோவிட் தடுப்பூசி போடப்பட்டுவருகிறது.
மேலும் ஏப்ரல் 1ஆம் தேதிமுதல் 45 வயதிலிருந்து 59 வயதுக்குள்பட்ட இணை நோய் இல்லாதவர்களுக்கும் தடுப்பூசி கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது என அரசு அறிவித்துள்ளது.