சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவர் ஒருவருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் அவருக்கு நேற்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அதன் முடிவு இன்று (டிச. 15) வரவுள்ளது.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் விடுதியில் தங்கியிருக்கும் 700 மாணவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்வது என நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி மூலம் மாணவர்களுக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும் விடுதி வளாகங்கள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.
இது குறித்து கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் இனியன் கூறும்போது, "அண்ணா பல்கலைக்கழகத்தின் முதுகலை மற்றும் இளங்கலையில் இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் மட்டுமே தற்போது விடுதியில் தங்கியுள்ளனர். விடுதியில் 700 மாணவர்கள் தங்கி உள்ளனர்.
சென்னை மாநகராட்சி மூலம் நான்கு மருத்துவக் குழுக்கள் இன்று கரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்கின்றனர். பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிமுறையின்படி ஒவ்வொரு அறையிலும் மாணவர்கள் தனித்தனியாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்குரிய உணவுகள் நேரடியாக அறையிலேயே வழங்கப்படுகின்றன. மாணவர்கள் பாதுகாப்பாக உள்ளதால் பெற்றோர்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை. ஒரு மாணவனுக்கு மட்டுமே காய்ச்சல் அறிகுறி இருந்ததால் மற்ற அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விவசாயிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை!