மருத்துவ படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு (ஓபிசி) 50 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திக, திமுக, அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன.
இதில் இன்று உத்தரவு பிறப்பித்துள்ள தலைமை நீதிபதி அமர்வு, மருத்துவ படிப்புகளில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50% இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து மத்திய அரசு விரைந்து சட்டம் இயற்ற வேண்டும் என்றும், மத்திய கல்வி நிலையங்கள் அல்லாத நிலையங்களிலும் இட ஒதுக்கீடு வழங்க சட்ட ரிதியாகவோ அரசியலமைப்பு ரீதியாகவோ எவ்வித தடையும் இல்லை என்றும் தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழ்நாடு பாஜக அலுவலகமான கமலாலயத்தில், அக்கட்சியின் மாநில செய்தி தொடர்பாளர் நாராயணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இதுகுறித்து பேசிய அவர், ” தேர்தலுக்காக இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு விவகாரத்தில் அடிப்படை ஆதாரமின்றி திமுக, காங்கிரஸ் கட்சிகள் பாஜகவை விமர்சிக்கின்றன. பாஜக கொண்டு வந்த மண்டல் ஆணையத்தை கிடப்பில் போட்டது காங்கிரஸ் கட்சியின் ஆட்சி.
வரலாற்று பின்னணியில் பார்த்தால் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக இருந்தவர்கள், திமுகவும் காங்கிரசும்தான். அதிமுக, பாமக, உள்ளிட்ட கட்சிகளும் இதர பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு குறித்து முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
இவ்விவகாரத்தில் உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு பாஜகவிற்கு கிடைத்த வெற்றி. இத்தீர்ப்பின் மூலம், இதை வைத்து திமுக அரசியல் செய்தது தெளிவாகியிருக்கிறது.
இட ஒதுக்கீடு விவகாரத்தில் சட்டம் இயற்ற வேண்டிய நிலை ஏற்படாது. அப்படி வந்தால், மத்திய பாஜக அரசு சட்டம் இயற்றும் ” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஓபிசி இடஒதுக்கீடு விவகாரம்: விரைந்து சட்டம் இயற்ற மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!