சென்னை: திருவொற்றியூர் காலடிப்பேட்டை பகுதியை சேர்ந்த தம்பதியினர் தங்கராஜ் மற்றும் அனிதா. இவர்கள் முகம் மற்றும் கைகளில் வெட்டு காயங்களுடன் சென்னை எழும்பூரில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்திற்கு நேற்று (ஆக. 12) வந்தனர். முகம் மற்றும் கைகளில் வெட்டுக் காயங்களுடன் இருவரும் அங்கு வந்ததால் ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
உடனடியாக அங்கிருந்த காவலர்கள் இருவரிடமும் நடத்திய விசாரணையில், குடும்ப தகராறு காரணமாக அனிதாவின் அண்ணன் அருண்குமார் அவர்கள் இருவரையும் வெட்டியது தெரியவந்தது. தங்கராஜ் மற்றும் அனிதா ஆகியோர் தங்களது வீட்டில் நேற்று காலையில் தனியாக இருந்தபோது, அருண்குமார் அங்கு வந்துள்ளார். அப்போது, அருண்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அனிதாவை வெட்டியதாகவும், தடுக்க முயன்ற தங்கராஜை முகத்தில் வெட்டி விட்டு தப்பிச் சென்றதாக கூறியுள்ளனர்.
இதுகுறித்து, திருவொற்றியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், காவல் துறையினர் முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி ஆணையாளர் அலுவலகத்தில் வெட்டு காயத்துடன் புகார் அளிக்க வந்ததாகவும் தெரிவித்தனர். மேலும், வெட்டு காயத்திற்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தங்களக்கு சிகிச்சை அளிக்கவில்லை எனவும் தெரிவித்தனர். பின் புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அங்கிருந்த காவலர்கள் அவர்களை சமாதானம் செய்து, ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ராணுவ துப்பாக்கியை பயன்படுத்திய விவகாரத்தில் 2 பேர் கைது