சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் அனுமதி பெற்ற 44 பரிசோதனை மையங்கள் உள்ளன. அவற்றில் 13 அரசு பரிசோதனை மையங்களும், 31 தனியார் பரிசோதனை மையங்களும் உள்ளன. இந்நிலையில், தனியார் பரிசோதனை மைய பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம், ஆணையர் பிரகாஷ் தலைமையில் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பேசிய ஆணையர் பிரகாஷ் சில அறிவுறுத்தல்களை வழங்கினார். அதில், ” கரோனா கண்டறிதல் சோதனைகளை துல்லியமாக மேற்கொண்டு, 24 மணி நேரத்தில் முடிவுகளை தெரிவிக்க வேண்டும். மேலும், பரிசோதனை முடிவுகளை 24 மணிநேரத்தில் ஐ.சி.எம்.ஆர் இணையதள பக்கத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
சென்னையில் நாள்தோறும் 12,000க்கும் மேல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் மட்டும் இதுவரை 9,64,638 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிற மாவட்டங்களைச் சேர்ந்தோர் சென்னையில் பரிசோதனை மேற்கொள்ளும்போது, அவர்களின் விவரங்களை சென்னை மாவட்ட கணக்கில் பதிவிடுவது தவிர்க்கப்பட வேண்டும். தொற்று பாதித்தவர் முகவரி அமைந்துள்ள மாவட்டத்தின் பதிவில்தான் அவ்விவரங்கள் சேர்க்கப்பட வேண்டும்.
பரிசோதனைக் கூடங்களில் ஐ.சி.எம்.ஆர் வழிமுறைகளை பின்பற்றி அவ்வப்போது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். அங்கு பணிபுரிவோருக்கு தேவையான பாதுகாப்பு உடைகளை வழங்க வேண்டும். அங்குள்ள அனைத்து பணியாளர்களும் தொழில்நுட்ப தகுதியுடையவர்களாக இருக்க வேண்டும் “ என்றார்.
இதையும் படிங்க: கரோனா கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை: வருகிறது அவசரச் சட்டம்!