சென்னை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் புதிதாக 28 ஆயிரத்து 561 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 80 ஆயிரம் என உயர்ந்துள்ளது.
சென்னையில் புதிதாக கரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7 ஆயிரத்து 520 என சற்று குறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் கோயம்புத்தூர் உள்ளிட்ட பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று (ஜன.20) வெளியிட்டுள்ள புள்ளி விவரத் தகவலில், “தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 253 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனால் தமிழ்நாட்டில் இருந்த 28 ஆயிரத்து 547 நபர்களுக்கும், வெளிநாடுகள், வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த 14 நபர்களுக்கும் என 28 ஆயிரத்து 561 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 91 லட்சத்து 55 ஆயிரத்து 335 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் 30 லட்சத்து 42 ஆயிரத்து 796 நபர்களுக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டன. இவர்களில் தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 205 நபர்கள் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
கடந்த 24 மணி நேரத்தில், 19 ஆயிரத்து 978 பேர் குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 26 ஆயிரத்து 479 பேராக உயர்ந்துள்ளது. அதேபோல் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துமனையில் 19 நோயாளிகளும், அரசு மருத்துவமனைகளில் 20 நோயாளிகள் என 39 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 37 ஆயிரத்து 112 என உயர்ந்துள்ளது.
சென்னையில் நேற்று (ஜன.19) 8 ஆயிரம் எனப் பதிவாகியிருந்த கரோனா தொற்று பாதிப்பு சற்று குறைந்து 7 ஆயிரத்து 520 என இன்று பதிவாகியுள்ளது. அதேபோல் கோயம்புத்தூரில் 3 ஆயிரத்து 390 என அதிகரித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 ஆயிரத்து 196 நபர்களுக்கும், கன்னியாகுமரி மாவட்டத்தில் 1,148 நபர்களுக்கும், சேலம் மாவட்டத்தில் 937 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 998 நபர்களுக்கும், ஈரோடு மாவட்டத்தில் 919 நபர்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 897 பேருக்கும் என அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகின்றன.
தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த பாதிப்பு சராசரி 17.9 விழுக்காடாக அதிகரித்துள்ளது. சென்னையில் 27..4 விழுக்காடு, செங்கல்பட்டில் 27.2 விழுக்காடு, கோயம்புத்தூர், கிருஷ்ணகிரியில் 27.3 விழுக்காடு என பாதிப்பு உள்ளது. பெரும்பாலான மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் சென்னை அதன் புறநகர் மாவட்டங்களிலிருந்து உள் மாவட்டங்களிலும் கரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தலை சுற்றும் கேட்டால்... பங்குகளாக சொத்துகள் குவித்த முன்னாள் அமைச்சர்