தமிழ்நாட்டில் மேலும் மூவருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழ்நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளார்.
அந்தப் பதிவில், தமிழ்நாட்டில் இரண்டாவதாக தொற்று உறுதிசெய்யப்பட்ட நபரிடம் தொடர்பிலிருந்த 18 வயது இளைஞர் ஒருவருக்கும், துபாயிலிருந்து வந்த 63 வயது முதியவருக்கும், கரோனா தொற்றுடன் தமிழ்நாட்டிலிருந்த தாய்லாந்து நாட்டவர்களுடன் தொடர்பிலிருந்த ஈரோட்டைச் சேர்ந்த 66 வயது முதியவருக்கும் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மூவரையும் தனிமைப்படுத்தி தற்போது தீவிர சிகிச்சையளித்து வருவதாகவும் அந்த ட்வீட்டில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக, டெல்லியிலிருந்து சென்னை வந்த நபர் (கரோனாவால் பாதிக்கப்பட்ட 2ஆவது நபர்) தற்போது குணமாகியுள்ளதாகவும், இரு நாள்களில் வீட்டுக்குத் திரும்புவார் எனவும் அமைச்சர் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில் அவருடன் தொடர்பிலிருந்த நபருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 2ஆவது நபர் குணமடைந்தார்'