சென்னையில் கரோனா தொற்று வேகமாகப் பரவிவருகிறது. சென்னையில் மட்டும் நாள்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொற்றினால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்க சுகாதாரத் துறையும் மாநகராட்சியும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
இருப்பினும் கரோனா தொற்று குறையாமல் குறிப்பிட்ட பகுதிகளான அண்ணா நகர், தண்டையார்பேட்டை, கோடம்பாக்கம் போன்ற இடங்களில் அதிகரித்த வண்ணம் உள்ளது.
இந்தப் பரவலைத் தடுக்கும் ஒரு பகுதியாக சென்னையில் உள்ள 15 மண்டலங்களிலும் நாள்தோறும் மாநகராட்சி, சுகாதாரத் துறை சார்பாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுவருகின்றன. அதன்படி இன்று 497 மருத்துவ முகாம்கள் நடைபெற்றன.
நேற்று நடைபெற்ற 497 மருத்துவ முகாம்களில் 23 ஆயிரத்து 818 பேருக்கு பரிசோதிக்கப்பட்டன. அதில் 1505 பேருக்கு சிறு அறிகுறி இருந்ததால் அருகிலுள்ள கரோனா பரிசோதனை மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
மே மாதம் முதல் இன்று வரை மொத்தம் 38 ஆயிரத்து 880 மருத்துவ முகாம்கள் நடைபெற்றுள்ளது. அதில் 21 லட்சத்து 11 ஆயிரத்து 234 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும் மருத்துவ முகாம்கள் மூலம் 20 ஆயிரத்து 416 பேருக்கு தொற்று இருப்பதை மாநகராட்சி உறுதிசெய்துள்ளது.
நாள்தோறும் நடைபெறும் மருத்துவ முகாமினை அமைச்சர்கள், சுகாதாரத் துறை முதன்மைச் செயலர், மாநகராட்சி ஆணையர் ஆகியோர் நேரில் ஆய்வு செய்துவருகின்றனர்.
மேலும் இன்று 511 மருத்துவ முகாம்கள் 15 மண்டலங்களிலும் நடைபெறும் எனச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.