தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுடன் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது கோயம்புத்தூர் மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநர் கூறும்போது, ”கேரளாவிலிருந்து வரும் வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் நிற்காமல் செல்கின்றன. கேரளாவிற்குள் வரும் வாகனங்களை மட்டுமே கேரளா சுகாதாரத் துறை அலுவலர்கள் சோதனை செய்த பின்னர் அனுமதிக்கின்றனர். வெளியே செல்லும் வாகனங்களை அவர்கள் சோதனை செய்வதில்லை. அந்த வாகனங்கள் சோதனைச் சாவடிகளில் நிற்காமல் வேகமாக செல்வதால் தங்களால் சோதனை செய்வதில் சிரமம் உள்ளது” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருடன் இணைந்து தேவையான அளவு காவலர்களை பணிக்கு அமர்த்தி, வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்த பின்னரே தமிழ்நாடு எல்லைக்குள் அனுமதிக்க வேண்டும்.
நோய் தொற்றினை தடுப்பதற்கு தேவையான அளவு நிதியுதவி அளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். சோதனைச் சாவடிகளில் பணியில் அமர்த்தப்படும் மருத்துவர்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து தர வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - கோவையில் மால்கள், திரையரங்குகள் மூடல்