சென்னை: தமிழ்நாட்டில் ஒரே நாளில் புதிதாக 2,131 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மேலும் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தொற்றுப் பரவல் மேலும் வேகமெடுத்துள்ளது.
இது குறித்து மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை இன்று வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தில்,
"தமிழ்நாட்டில் மேலும் புதியதாக ஒரு லட்சத்து மூன்றாயிரத்து 573 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டில் 2,683 பேர், வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 48 பேர் என 2,731 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுவரை தமிழ்நாட்டில் ஐந்து கோடியே 69 லட்சத்து 16 ஆயிரத்து 542 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 27 லட்சத்து 55 ஆயிரத்து 587 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்குள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.
இவர்களின் தற்பொழுது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 12 ஆயிரத்து 412 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர். மேலும் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த 674 பேர் வீட்டிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இவர்களுடன் சேர்த்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 27 லட்சத்து ஆறாயிரத்து 370 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் தனியார் மருத்துவமனையில் நான்கு நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் ஐந்து நோயாளிகள் என ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கைக 36 ஆயிரத்து 805 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மேலும் புதிதாக ஆயிரத்து 489 பேர், செங்கல்பட்டில் 290 பேர், கோயம்புத்தூரில் 120 பேர், திருவள்ளூரில் 147 பேர், வேலூரில் 105 பேர் எனப் புதிய பாதிப்புகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. ஒமைக்ரான் தொற்றால் 121 பேர் பாதிக்கப்பட்டதில் 105 பேர் குணமடைந்து வீட்டுக்குச் சென்றுள்ளனர். 13 பேர் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சென்னையில் மொத்தம் 1158 தெருக்களில் கரோனா தொற்றாளர்கள் - மாநகராட்சி தகவல்