சென்னை: தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாள்களாக கரோனா பாதிப்பு குறைந்துள்ளது எனவும், பொங்கல் விடுமுறைக்குப் பிறகு எடுக்கப்படும் பரிசோதனையில் தொற்றாளர் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எம்ஜிஆரின் முழு உருவச் சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்குத் தமிழ்நாடு அரசு சார்பில் மா. சுப்பிரமணியன் மலர்த்தூவி மரியாதை செலுத்தினார்.
எம்ஜிஆருக்கு மரியாதை செலுத்துவது அரசுக்குப் பெருமை
பின்னர் செய்தியாளரிடம் பேசிய மா. சுப்பிரமணியன், "முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆருக்கு தமிழ்நாடு அரசு சார்பில் மிகச் சிறப்பாகப் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி மிகச் சிறப்பாக நடக்கிறது. 1962 முதல் சட்டமன்ற மேலவை உறுப்பினராக, 1967 முதல் சட்டப்பேரவை உறுப்பினராக, 1969 முதல் திமுக பொருளாளராக திறம்படப் பணியாற்றியவர்.
1977 முதல் 1987 ஆண்டுவரை எம்ஜிஆர் 10 ஆண்டுகள் தமிழ்நாடு முதலமைச்சராகச் சிறப்பாகப் பணியாற்றியவர். அவரது பிறந்தநாளில் மலர்த் தூவி மரியாதை செலுத்துவதைத் தமிழ்நாடு அரசு பெருமையாகக் கருதுகிறது. தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாள்களாக கரோனா குறைத்துவருகிறது. கடந்த ஒரு வாரமாக இரண்டாயிரம் என்ற அளவில் உயர்ந்துகொண்டே சென்ற தொற்றின் எண்ணிக்கை நேற்று ஒன்பது என்ற அளவில் மட்டும் உயர்ந்தது.
இன்று வந்துள்ள தகவலின் அடிப்படையில் நேற்றைக் காட்டிலும் குறைவதற்கு வாய்ப்புள்ளது. பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் எடுக்கப்படும் பரிசோதனையில் கூடுதல் தொற்று ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. பரிசோதனை எண்ணிக்கை தொடர்ந்து குறைக்காமல் எடுக்கப்பட்டுவருகிறது. இந்தியாவில் அதிகமான பரிசோதனை செய்யப்படுகிறது.
தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்திக்கொள்க
நாள்தோறும் ஒன்றரை லட்சத்துக்கும் குறையாமல் பரிசோதனை செய்தாலும், மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படுவோர் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. மாதவரத்தில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் இரண்டாயிரம் படுக்கைகள் அமைக்கும் பணி நடைபெற்றுவருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சத்து 91 ஆயிரத்துக்கு மேல் படுக்கைகள் தயாராக இருந்தாலும், ஒன்பதாயிரம் வரையே நிரம்பியுள்ளது. ஆக்சிஜன், மருந்து, மாத்திரை போதுமான அளவு இருப்பில் உள்ளது. தடுப்பூசி செலுத்திய பலர் மரணத்தின் விளிம்புக்கும் சென்றும் உயிர் திரும்பியுள்ளனர். 15 முதல் 18 வயதுக்குள்பட்ட 76 விழுக்காடு பள்ளி மாணவர்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்பட்டுவிட்டது.
இரண்டாம் தவணையை 90 லட்சத்துக்கும் அதிகமானோர் செலுத்திக் கொள்ளாமல் உள்ளனர். 60 வயதைக் கடந்தோர் தாமாகவே முன்வந்து தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும். ஞாயிறு முழு ஊரடங்கு முழு வெற்றிபெற்றது. கட்டுப்பாடுகளை மீறி பட்டினப்பாக்கம் போன்ற காவல் துறை கட்டுப்பாடு குறைவான பகுதிகளில் மக்கள் ஒன்றுகூடினாலும் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படுகின்றனர். கரோனா காலத்திலும் பிற நோய்களுக்கும் சுணக்கம் இல்லாமல் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
மக்களைத் தேடி மருத்துவம்
மருத்துவமனைகளில் முறையாகப் பிற நோய்களுக்குச் சிகிச்சையளிப்பதில் குறைபாடு இருப்பதாகப் புகார்கள் இருந்தால் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். புற நோயாளிகள் சிகிச்சை நேரத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 45 லட்சத்துக்கும் மேலானோருக்கு மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் மூலம் சிகிச்சையளிக்கப்பட்டுள்ளன. மேலும் இத்திட்டம் மூலம் 89 லட்சம் மருத்துவப் பெட்டகங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் என்னும் தாரக மந்திரம்!